2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்…. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்..
விஜய் சுற்றுப்பயணத்திற்கு 21 நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது.. குறிப்பாக விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து 5 கார்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.. ஆனால் விஜய்யின் பிரச்சார வாகனத்தை நூற்றுக்கணக்கான தொண்டர்கள், கார் பைக் மூலம் பின் தொடர்ந்து செல்கின்றனர்.. மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு சென்றிருக்கிறார்.. இதனால் விஜய்யின் பிரச்சாரம் பெரும் ஊர்வலம் போல் மாறியது..
இதனால் திருச்சியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. காலை 10.30 மணி விஜய் மரக்கடை பகுதியில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 2.30 மணியளவில் தான் பரப்புரை செய்யும் இடத்தை சென்றடைந்தார்..
இந்த நிலையில் திருச்சி மரக்கடை பகுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் பேச தொடங்கினார்.. அப்போது “ எல்லோருக்கும் வணக்கம்.. அந்த காலத்தில் போருக்கு செல்வதற்கு முன்பு, குலதெய்வவம் கோயிலுக்கு சென்று சாமியை கும்பிட்டு தான் போருக்கு செல்வார்களாம்.. அதே போல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனநாயக போரை சந்திப்பதற்கு முன்பு உங்களை சந்திக்கலாம் என்று வந்திருக்கேன்.
திருச்சியில் தொடங்கும் எல்லாமே திருப்புமுனையாக அமையும் என்று சொல்வார்கள்.. திருச்சிக்கென நிறைய வரலாறு உள்ளது.. பெரியார் வாழ்ந்த இடம். மலைக்கோட்டை அமைந்துள்ள இடம்.. கொள்கை உள்ள மண் இது.. உங்கள் எல்லாரையும் பார்க்கும் போது ஒரு பரவசம் ஒரு எமோஷனல் உணர்வு இருக்கு.” என்று பேசிக் கொண்டிருந்தார்..
ஆனால் விஜய் பேசியது மைக் பிரச்சனையால் தொண்டர்களுக்கு கேட்கவில்லை.. இதனால் கேட்கவில்லை, கேட்கவில்லை என்று தொண்டர்கள் கூச்சலிட்டனர்..
இதை தொடர்ந்து பேசிய அவர், 2 அமைச்சர்கள் இருந்தும் திருச்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறினார்.. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாதது, திருச்சியில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்தும் பேசினார். திமுக அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றாததை குறிப்பிட்டு விஜய் கேள்வி எழுப்பினார்.. திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்துவிட்டனர்.. ரூ.1000 கொடுத்துவிட்டு, சொல்லிக்காட்டி அசிங்கப்படுத்தினர்.. ஓசி பயணம் என்று சொல்லி அவமானப்படுத்தினர்.. கிட்னி திருட்டை முறைகேடு என்று கூறுகிறார்கள்..
திருச்சி திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெறுகிறது.. வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா?” என்று ஆவேசமாக பேசினார்..
எனினும் தொழில்நுட்பக் காரணமாக விஜய் பேசியது கேட்காததால், தனது பேச்சை விஜய் சுருக்கமாக முடித்துக் கொண்டார். 7 மணி நேரமாக காத்திருந்த தொண்டர்கள் விஜய்யின் பேச்சை கேட்க முடியாததால் ஏமாற்றமடைந்தனர்..