ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது எப்போதும் போல திமுகவை கடுமையாக விமர்சித்தார். கரூர் கூட்ட நெரிசலுக்குப் பிறகு முதல்முறையாக தமிழகத்தில் கூட்டம் நடைபெறுவதால், தவெக கட்சி மற்றும் காவல்துறை தரப்பில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய விஜய்,” காலிங்கராயன் கால்வாய் வரலாறு கொண்டது. அவரது தாயார் கொடுத்த தைரியத்தில் கால்வாய் கட்டினார் காலிங்கராயன். அப்படி ஒரு தைரியத்தை நீங்கள் எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். இதெல்லாம் சூழ்ச்சி செய்து கெடுக்க நினைக்கும் கூட்டத்திற்கு தெரியாது. இது 30 ஆண்டுகளுக்கு மேலான உறவு என பேசினார்.
அப்போது, ரசிகர் ஒருவர் அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறினர். இதனால் டென்ஷன் ஆன விஜய், “தம்பி கீழ இறங்குப்பா.. கீழே இறங்குப்பா” என இரு முறை கூறினார். அதன் பின்னும் அந்த நபர் இறங்காமல் உயரத்தில் ஆபத்தான முறையில் நின்று கொண்டு தவெக தலைவர் விஜயை நோக்கி முத்தம் கொடுத்தார். அதற்கு விஜய் தம்பி நீ “கீழ இறங்கினால் தான் முத்தம் கொடுப்பேன்” எனக் கூறினார்.
தொடர்ந்து அவர் கம்பத்தில் இருந்து இறங்கும்வரை விஜய் தனது பேச்சை தொடரவில்லை. உடனே அந்த ரசிகனும் கீழே இறங்க விஜய் முத்தத்தை பறக்க விட்டார். அந்த சமயம் ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் பூண்டனர். அதன் பின்னர் விஜய் தனது பேச்சை தொடங்கினார்.



