தவெகவின் 2-வது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி மதுரை நடைபெறும் என்று விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. மறுபுறம் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்தே தேர்தலை சந்திக்க உள்ளார். விஜய்யின் தவெகவும் களத்தில் உள்ளதால் இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது..
அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.. கடந்த 4-ம் தேதி நடந்த தவெகவின் செயற்குழு கூட்டத்தில் திமுக, பாஜக உடன் கூட்டணி கிடையாது என்பதை விஜய் திட்டவட்டமாக அறிவித்தார். தவெக தலைமையில் கூட்டணி அமையும் என்றும் அவர் கூறினார்.
இதனிடயே தவெகவின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.. இதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.. இந்த சூழலில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : தவெக 2-வது மாநாடு பூமி பூஜை: ஒரே மேடையில் விநாயகர், மாதா, மெக்கா படங்கள்..!!