தங்கள் பழங்கால பலதார பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்டு இரண்டு சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டனர்..
புராணங்களில் ஒரே பெண்ணை சகோதரர்கள் திருமணம் செய்தனர் என்ற கதையை நாம் கேட்டிருப்போம்.. மகாபாரதத்தில் வரும் பஞ்ச பாண்டவர்கள் இதற்கு சிறந்த உதாரணம்.. பலதார மணம் தற்போதைய காலக்கட்டத்தில் இல்லை என்று நினைக்கலாம்.. ஆனால் இந்த பலதார மணம் என்பது ஒரு சில கலாச்சாரங்களில் இன்றும் பின்பற்றப்படுகிறது.. அந்த வகையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பழங்கால ஹேட்டி பாலியண்ட்ரி பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்டு இரண்டு சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்தனர்.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் டிரான்ஸ்-கிரி பகுதியில் நடந்த திருமணம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ஷில்லாய் கிராமத்தில் ஹட்டீ சமூகத்தின் பல தார மணம் இன்றும் புழக்கத்தில் உள்ளதாம்.. இந்த கிராமத்தை சேர்ந்த பிரதீப் நேகி மற்றும் கபில் நேகி ஆகியோர் குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா சவுகான் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளனர்..
முழு பரஸ்பர சம்மதம் மற்றும் சமூக பங்கேற்புடன் இந்த திருமணம் நடந்துள்ளது.. மூத்த சகோதரரான பிரதீப், ஜல் சக்தி துறையில் பணிபுரிகிறார், அதே நேரத்தில் கபில் விருந்தோம்பல் துறையில் வெளிநாட்டில் பணிபுரிகிறார். இந்த சகோதரர்கள் சுனிதா உடனான திருமணத்தில் ஒவ்வொரு சடங்கிலும் பங்கேறனர்.
மணமகன் பிரதீப் இதுகுறித்து பேசிய போது “இது எங்கள் கூட்டு முடிவு.. இது நம்பிக்கை, கவனிப்பு மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு பற்றிய விஷயம். எங்கள் மரபுகளை பற்றி நாங்கள் பெருமைப்படுவதால் நாங்கள் எங்கள் பாரம்பரியத்தை வெளிப்படையாகப் பின்பற்றினோம்.
நாங்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையை நம்பியுள்ளோம். நான் வெளிநாட்டில் வசிக்கலாம், ஆனால் இந்த திருமணத்தின் மூலம், எங்கள் மனைவிக்கு ஒரு ஐக்கிய குடும்பமாக ஆதரவு, ஸ்திரத்தன்மை மற்றும் அன்பை நாங்கள் உறுதி செய்கிறோம்.” என்று தெரிவித்தார்.
மணமகள் சுனிதா இதுகுறித்து பேசிய போது, “இது எனது விருப்பம். இருவரை திருமணம் செய்ய வேண்டும் என்று எனக்கு ஒருபோதும் அழுத்தம் கொடுக்கப்படவில்லை. இந்த பாரம்பரியத்தை நான் அறிவேன், நான் அதை விருப்பத்துடன் தேர்ந்தெடுத்தேன். நாங்கள் ஒன்றாக இந்த உறுதிப்பாட்டைச் செய்துள்ளோம், மேலும் நாங்கள் உருவாக்கிய பிணைப்பில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.”
இத்தகைய திருமண ஏற்பாடுகள் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் அமைதியாக நடைமுறையில் இருந்தாலும், வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சில நிகழ்வுகளில் இந்த திருமணமும் ஒன்றாகும்.
ஷில்லை கிராமத்தைச் சேர்ந்த பிஷன் தோமர் இதுகுறித்து பேசிய போது “எங்கள் கிராமத்தில் மட்டும் இரண்டு அல்லது மூன்று சகோதரர்களுக்கு ஒரு மனைவி அல்லது ஒரு கணவருக்கு பல மனைவிகள் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆனால் அந்த திருமணங்கள் அமைதியாக நடக்கின்றன.” என்று தெரிவித்தார்.
3 நாட்கள் நடந்த இந்த திருமணக் கொண்டாட்டத்தில், கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.. இந்த விழாவில் பிராந்தியத்தில் திருமணங்களின் போது வழக்கமாக தயாரிக்கப்படும் சிறப்பு உள்ளூர் உணவு வகைகள் இடம்பெற்றன.
இந்த திருமணம் பண்டிகை போல கொண்டாடப்பட்டது.. பலரும் பஹாரி நாட்டுப்புற பாடல்களுக்கு மகிழ்ச்சியுடன் நடனமாடி, மணமகள் மற்றும் மணமகன் இருவருக்கும் மகிழ்ச்சியான, ஒன்றுபட்ட திருமண வாழ்க்கைக்காக தங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதங்களைப் பாடி வாழ்த்தினர்.
டிரான்ஸ்-கிரி பகுதியில் பலதார திருமண முறை பல சிக்கல்களை நிவர்த்தி செய்வதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.. மூதாதையர் நிலத்தைப் பிரிப்பதைத் தவிர்ப்பது, எந்தப் பெண்ணும் விதவையாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்தல் மற்றும் சகோதரர்கள் வேலைக்கும் வீட்டிற்கும் இடையில் பொறுப்புகளைப் பிரிக்க வேண்டிய குடும்பங்களில் ஒற்றுமையைப் பேணுதல் போன்ற நன்மைகள் இந்த பலதார திருமண முறையில் கிடைக்கின்றன என்றும் அவர்கள் கூறுகின்றனர்.. ஹட்டீ சமூகத்திற்கு சமீபத்தில் பட்டியலிடப்பட்ட பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட்டதன் மூலம், இந்தத் திருமணம் அதிக குறியீட்டு முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.