இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான பாலிக்குச் சென்று கொண்டிருந்தபோது கப்பல் கவிழ்ந்து நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 38 பயணிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
KMP துனு பிரதாமா ஜெயா என்ற அந்தக் கப்பல், கிழக்கு ஜாவாவின் பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 25 நிமிடங்களுக்குப் பிறகு, பாலி ஜலசந்தியில் விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், “65 பேர் பயணம் செய்த இந்த கப்பலில் 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார். அறிக்கையின்படி, 53 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள், 14 லாரிகள் உட்பட 22 வாகனங்களுடன் பன்யுவாங்கியிலிருந்து புறப்பட்ட கப்பல், வடக்கு பாலியில் உள்ள ஒரு துறைமுகத்தை நோக்கிச் சென்றது.
ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, பேரழிவு ஏற்பட்டது. விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்தோனேசியா 17,000க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட நாடாகும். இதனால், படகுப் பயணம் இங்கு மிகவும் பொதுவானது. ஆனால், “பயணிகள் எண்ணிக்கை, பாதுகாப்பு உபகரணங்கள், மீட்பு திட்டங்கள் எதுவும் சரிவர செயல்படவில்லை” என பல முன்னைய சம்பவங்களும், தற்போதைய விபத்தும் சுட்டிக்காட்டுகின்றன.
முந்தைய விபத்துகள்:
2024 மார்ச் – பாலி அருகே விபத்து: 16 பயணிகளுடன் பயணித்த படகு கொந்தளிக்கும் கடலில் கவிழ்ந்தது. ஒரு ஆஸ்திரேலியப் பெண் உயிரிழந்தார்; மேலும் ஒருவர் காயமடைந்தார்.
2022 – கிழக்கு நுசா தெங்காரா: 800 பயணிகளுடன் சென்ற படகு, கரையை அடைய முடியாமல் இரு நாட்கள் கடலில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
2018 – சுமத்ரா டோபா ஏரி பேரழிவு: உலகின் ஆழமான ஏரிகளில் ஒன்றான டோபா ஏரியில் நடந்த விபத்தில், 150க்கும் மேற்பட்டோர் மூழ்கி உயிரிழந்தனர். இது இந்தோனேசியாவின் சமீபத்திய வரலாற்றில் மிகக் கொடூரமான படகுப் பேரழிவாக பதிவு செய்யப்பட்டது.
Read more: 1.65 லட்சம் சம்பளதாரர்களுக்கு நோட்டீஸ்.. வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை..!