ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உலகப் புகழ்பெற்ற வைஷ்ணோ தேவி கோயில், ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்களை ஈருக்கும் ஆன்மிகத் திருத்தலமாக திகழ்கிறது. குறிப்பாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் இந்த கோயிலை தரிசிக்க வருவது வழக்கம்.
கனமழையின் காரணமாக, மலைப் பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பக்தர்கள் செல்லும் வழிகளில் கற்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. மீட்பு குழுவினரும் பாதுகாப்பு படையினரும் நிலச்சரிவுகளை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பாதை பகுதிகளில் கம்பிகள், தடுப்புகள், கண்காணிப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இயற்கையின் தாக்கத்தை முற்றிலும் தடுக்க முடியாத நிலை நீடிக்கிறது.
கடந்த சில நாட்களாகவே ஜம்மு காஷ்மீரில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே இன்று திங்கள் காலை திடீர் கனமழையின் காரணமாக, காத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. குதிரை சவாரி மூலம் யாத்திரை செல்லும் வழியான குல்சான் கா லங்கர் அருகே உள்ள பங்காங்கா பகுதியில் நேற்று காலை 8.30 மணிக்கு இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சென்னையைச் சேர்ந்த குப்பன், 70, அவரது மனைவி ராதா, 66, ஆகியோர் உள்பட 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், சென்னையை சேர்ந்த குப்பன் உள்பட இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலச்சரிவில் சென்னையை சேர்ந்த குப்பனின் மனைவி படுகாயமடைந்த நிலையில், அவர் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மண் மற்றும் கற்களை உடனடியாக அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக நேற்று மதியம் 1 மணி வரையில் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Read more: மனித மண்டை ஓடுகளால் கோபுரங்களைக் கட்டிய கொடூர மன்னர்கள் யார் யார்? வரலாற்றின் இருண்ட பக்கங்கள்..