உத்தரப் பிரதேச மாநிலத்தில் திடீரென பிரேக் டான்ஸ் ராட்டினம் உடைந்து விழுந்ததால், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டம் பாதல்பூர் பகுதியில் நடைபெற்ற பொருட்காட்சியில், Break Dance swing என்று அழைக்கப்படும் ராட்டினத்தில் பொதுமக்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ராட்டினத்தில் ஒரு பகுதி மட்டும் திடீரென உடைந்தது. இந்த விபத்தில் பெண் உள்பட இருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவத்தன்று கண்காட்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது மக்கள் மகிழ்ச்சியாக சவாரி செய்து கொண்டிருந்த “பிரேக் டான்ஸ்” ஊஞ்சல் திடீரென “கிராஷ்” என்ற சத்தத்துடன் நின்றது. சில நொடிகளில் அதன் இருக்கைகள் சமநிலையை இழந்து உடைந்து விழுந்தன. அப்பொழுது ஊஞ்சலில் அதிக மக்கள் இல்லாததால் மிகப்பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
காயமடைந்த இருவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஊஞ்சல் உடைந்தவுடன் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி ஓடினர். பரபரப்பு நிலை ஏற்பட்ட நிலையில், கண்காட்சி நிர்வாகம் உடனடியாக ஊஞ்சலை மூடி, பாதுகாப்பு சோதனையைத் தொடங்கியது.
இந்த விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் ஊஞ்சல் திடீரென நின்று, இருக்கைகள் உடைந்து கீழே விழும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. பாதுகாப்பு சோதனைகளை புறக்கணித்த நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கண்காட்சிகள் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான சூழலை வழங்கும் இடமாகக் கருதப்படுகின்றன. ஆனால் பாதுகாப்பு ஆய்வுகள், இயந்திர பராமரிப்பு, மற்றும் சோதனைகள் பற்றிய அலட்சியம், இந்த மகிழ்ச்சியை ஆபத்தானதாக மாற்றுகிறது. இத்தகைய நிகழ்வுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு பின்பற்றப்படுகின்றன என்ற கேள்வியை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.