உத்தரகாண்ட் மாநிலம் பிபல்கோட்டியில் உள்ள தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டுக் கழகத்தின் (THDC) திட்டப் பகுதியில் சுரங்கப்பாதைக்குள் இரண்டு லோகோ ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 70 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு, பணி மாற்றத்தின் போது நடந்தது.
இரண்டு ரயில்களிலும் சுமார் 108 தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஒரு ரயில் மற்றொரு ரயிலின் மீது பின்னால் இருந்து மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோதல் சுரங்கப்பாதையின் இருண்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது. பலர் நிலைதடுமாறி ரயில் பெட்டிகளுக்குள் விழுந்தனர்.
மோதலுக்குப் பிறகு, சுரங்கப்பாதைக்குள் பீதியும் குழப்பமும் ஏற்பட்டது. தொழிலாளர்கள் அலறும் சத்தம் கேட்டது, மேலும் பலர் எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் குழப்பமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், திட்ட மேலாண்மை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்கினர். காயமடைந்த தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கோபேஸ்வர் மாவட்ட மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், காயமடைந்த பெரும்பாலான தொழிலாளர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும், சிலருக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக அவர்கள் சிறப்பு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தற்போது, 42 காயமடைந்த தொழிலாளர்கள் கோபேஸ்வர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மற்ற 17 பேர் பிபல்கோட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மாவட்ட ஆட்சியர் கௌரவ் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுர்ஜித் சிங் பன்வார் ஆகியோர் காயமடைந்த தொழிலாளர்களின் நிலை குறித்து விசாரிக்க கோபேஸ்வர் மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றனர்.
காவல் கண்காணிப்பாளர் பன்வார் இதுகுறித்து பேசிய போது “42 பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 4-5 பேருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. 17 பேர் பிபல்கோட்டியில் உள்ள விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்… திட்டப் பகுதியில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டன… எங்கள் படையினரும் நிர்வாக அதிகாரிகளும் இரண்டு மருத்துவமனைகளிலும் உள்ளனர்,” என்று கூறினார். காயமடைந்த பெரும்பாலான தொழிலாளர்கள் ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்தச் சம்பவம் குறித்து அவர்களது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



