அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே நிலவி வந்த பனிப்போர், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், “அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேசுவேன்” என செங்கோட்டையன் கூறியிருந்தார்.
அதன்படி, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணியை அடுத்த 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கோட்டையனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி கட்சியின் முக்கிய நிர்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கே.ஏ. செங்கோட்டையன் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நடவடிக்கை, தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் தான், அதிமுக விவகாரம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அதிமுகவை பாஜக கூறு போட்டுவிட்டதாக விமர்சித்தார். அதிமுக – பாஜக கூட்டணி சுய அழிவை ஏற்படுத்திக்கொள்வதாகவும், ஒன்றுக்கொன்று விழுங்கிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணியை இணைந்து வீழ்த்துவதற்கான போரில், 2026 சட்டமன்றத் தேர்தலில் முன்கள வீரர்களாக நிற்க வேண்டும் முதல்வர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்த 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை அடைவதே அடுத்த 6 மாதங்களுக்கான முக்கியப் பணி. இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதல்வராக வருவதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



