நன்றியில்லாதவர் என்று அமெரிக்க அதிபர் டிரம்பை சாடிய எலோன் மஸ்க், “எனது உதவி இல்லையென்றால் 2024 தேர்தலில் தோல்வியடைந்திருப்பார்” என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள், தற்போது கடுமையான பொதுவெளி சண்டையாக மாறியுள்ளது. இதன் மையக் காரணமாக, டிரம்ப் நிர்வாகம் முன்வைத்துள்ள “One Big Beautiful Bill” என்ற வரி மற்றும் செலவுத்திட்ட மசோதா தான் காரணமாக சொல்லப்படுகிறது.
இதனால் நெருங்கிய நண்பர்களாக இருந்த டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் தற்போது அவர்கள் ஒருவரையொருவர் பொதுவெளியில் விமர்சிக்கும் அளவுக்கு இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அதாவது, புதிதாக கொண்டு வந்த மசோதாவில் மின்சார வாகனங்கள் கட்டாயம் இல்லை என்ற அம்சம் இடம் பெற்றுள்ளது. இந்த மசோதா நிறைவேறிய சிறிது நேரத்தில் எலான் மஸ்க்கின் டெஸ்லா பங்குகள் 8 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. மின்சார வாகனங்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த வரி சலுகையை டிரம்பின் புதிய பிக் பியூட்டில் மசோதா ரத்து செய்து இருக்கிறது.
இந்த மசோதா, எதிர்வரும் 10 ஆண்டுகளில் தேசிய கடனை $3 டிரில்லியனால் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மஸ்க், இந்த மசோதாவை “அருவருப்பானது” என விமர்சித்து, இது விரைவாகவும், சரியான பார்வையின்றியும் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டதாக குற்றம்சாட்டினார். மஸ்க், இந்த மசோதாவை எதிர்த்து, “Kill the Bill” என்ற பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
இதுதொடர்பாக ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், எலான் மஸ்க்கை எதிர்த்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். “மஸ்க் இந்த வரி மற்றும் செலவுத்திட்ட மசோதாவைப் பற்றிய தகவலை ஆரம்பத்திலிருந்தே தெரிந்துகொண்டிருந்தார். ஆனால் இப்போது அதைப் பற்றி பேசி என்னை public-ஆக குறை கூறுகிறார். இது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் உடனான என் உறவு இனி மாறக்கூடும்.””எலான் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், எலான் மஸ்க் தனது சமூக ஊடக தளமான X-இல் டொனால்ட் டிரம்ப் மீது நேரடியாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். “டிரம்ப் பொய் பேசுகிறார். அவர் தான் அமெரிக்காவை கடன் சுழற்சியில் தள்ளியவர். அரசு மசோதா என்றால் அது ‘சரளமாகவும், அழகாகவும்’ இருக்க வேண்டும். இப்போது கொண்டு வரப்பட்ட மசோதா அதற்கு எதிர்மறையானது என்று குறிப்பிட்டுள்ளார்.