துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.. அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது.. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது..
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது..
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசியுள்ளதாக தகவல் குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.. திமுகவிற்கு மக்களவையில் 22 எம்.பிக்கள், மாநிலங்களவையில் 10 எம்.பிக்கள் என மொத்தம் 32 எம்பிக்கள் இருக்கின்றனர்.. இதனால் மிகப்பெரிய கட்சியாக உள்ளதால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி உள்ளார்..
குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனை திமுக கூட்டணி ஆதரிக்க தமிழக பாஜக கோரிக்கை விடுத்திருந்தது.. அதே போல் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுகவும், சிபி ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் கோரியுள்ளது..
ஆனால், திமுகவோ தமிழர் ஒருவர் துணை குடியரசு தலைவர் பதவிக்கு பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு தான் என்றாலும், கொள்கை ரீதியாக பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என்று கூறி வருகிறது.. எனினும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், சிபி ராதாகிருஷ்ணனை ஆதரிப்பது குறித்து என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தற்போது 781 எம்.பிக்கள் உள்ளனர்.. துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற 391 வாக்குகள் தேவை.. தேசிய் ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்பிக்கள் பலம் உள்ளதால் சிபி ராதாகிருஷ்ணனின் வெற்றி வாய்ப்பு அதிகமாகவே உள்ளது..