சமீபத்தில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி திருமணம் ஆகாத கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மகள், தனது தந்தையிடமிருந்து பராமரிப்பு (maintenance) தொகையை கோர முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ சட்டங்களில் அந்த விதி இல்லை என்பதால், அந்த அடிப்படையில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கேரள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி டாக்டர் கௌசர் எடப்பகத் தலைமையிலான அமர்வு, இந்த தீர்ப்பை வழங்கியது.. இந்த வழக்கில், 65 வயது கிறிஸ்தவ நபர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவர், குடும்ப நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து மனு செய்தார்.
குடும்ப நீதிமன்றம், அந்த நபரை தனியாக வாழும் அவரது மனைவிக்கு மாதம் ரூ.20,000 பராமரிப்பு தொகை, மற்றும் 27 வயது திருமணம் ஆகாத மகளுக்கு ரூ.10,000 பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக, அந்த நபர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
தனது மகள் மனு தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில் பெரியவளாக (major) இருந்ததால், பராமரிப்பு தொகைக்கு தகுதியில்லையென்று கூறினார். மேலும், தனது மனைவி தானே அவரை விட்டு பிரிந்து சென்றவர் என்றும், தனக்கு போதுமான வருமானம் இருப்பதால் பராமரிப்பு கேட்க முடியாது என்றும் வாதிட்டார்.
இதன் அடிப்படையில், அவர் குடும்ப நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கில், திருமணம் ஆகாத கிறிஸ்தவ மகளுக்கான பராமரிப்பு தொகை வழங்கப்பட முடியாது என்ற முடிவுக்கு நீதிமன்றம் வந்தது.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்களை (Personal Laws) மேற்கோள் காட்டி விளக்கியது: “ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் (HAMA) பிரிவு 20(3) படி, தந்தைக்கு தனது திருமணம் ஆகாத மகளுக்கு பராமரிப்பு வழங்கும் சிவில் கடமை (civil liability) உள்ளது. அதேபோல், இஸ்லாமிய தனிச்சட்டங்களிலும், தந்தை தனது திருமணம் ஆகாத மகளுக்குப் பராமரிப்பு வழங்கும் கடமை உண்டு. ஆனால், கிறிஸ்தவர்கள் தொடர்பான எந்த தனிச்சட்டத்திலும், மகள் தந்தையிடம் பராமரிப்பு கோர அனுமதிக்கும் விதி இல்லை. எனவே, குடும்ப நீதிமன்றம் வழங்கிய மகளுக்கான பராமரிப்பு உத்தரவு நிலைத்திருக்க முடியாது,” என்று நீதிமன்றம் தெரிவித்தது.
அதே நேரத்தில், மனைவிக்கான பராமரிப்பு தொகையை மறுக்கும் மனுதாரரின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. “ஒரு தாயின் பெற்றோர் கடமை (parental obligation) என்பது, திருமணப் பொறுப்பை விட விரிவானது,” என்று குறிப்பிட்டது. அதனால், மனைவிக்கு மாதம் ரூ.20,000 பராமரிப்பு தொகையும், கல்விச்செலவுக்கான ஒருமுறை ரூ.30,000 தொகையும் வழங்கிய குடும்ப நீதிமன்ற உத்தரவை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது..
Read More : இனி காலை நேரத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்.. இந்திய ரயில்வேயின் புதிய விதிகள்!



