ஆந்திராவில் வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வகின்றது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஏரி , குளம் , குட்டை என அனைத்தும் நிரம்பி வழிகின்றது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் போர்பந்தா பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சைக்கிளுடன் அடித்துச்செல்லப்பட்டார். பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டனர்.
இதே போல அனந்த்பூரில் ராட்சத லாரி ஒன்று தரைப்பாலத்தை கடக்க முயற்சி செய்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்தவருக்கு நீச்சல் தெரிந்ததால் அவர் நீந்தி தரைப்பகுதியை அடைந்தார்.
கடந்த 50 ஆண்டுகளில் இது போன்ற கனமழை இல்லை. நீர் செல்லும் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டதால் வீடுகள் உள்ள பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 300 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகளால் மாற்றப்பட்டுள்ளனர். ரங்கசாமிநகரில் சிக்கி தவிக்கும் மக்களை படகுகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எம்எல்ஏக்கள் அனந்த வெங்கடராமிரெட்டி, பிரகாஷ், எம்பி கோரண்ட்லா ஆகியோர் நிவாரண பணிகளை கண்காணித்து வருகின்றனர்.