திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குளத்துப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் பார் ஊழியரான பிரபாகரன் என்பவர், மர்மமான முறையில் சாலையோரம் சடலமாக கிடந்த விவகாரத்தில், அவரது மனைவி அபிராமியே தன் காதலனுடன் சேர்ந்து கொலையை செய்தது அம்பலமாகியுள்ளது. தனது உறவினரான பிரபு என்பவருடன் அபிராமி கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில், கணவர் கண்டித்ததே, இந்தப் படுகொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
திட்டமிட்டபடி கடந்த பிப்ரவரி 12-ம் தேதி இரவு, பிரபாகரனை அபிராமி வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அங்கே ஏற்கனவே பதுங்கியிருந்த காதலன் பிரபு மற்றும் அவரது நண்பர் சரவணன் ஆகியோர், பிரபாகரனுக்கு திணிக்கத் திணிக்க மதுவைக் கொடுத்து அவரை நிலைகுலையச் செய்துள்ளனர். அதிகளவு போதையில் இருந்த பிரபாகரனை மூவரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, விபத்து போல காட்டச் சடலத்தைப் புளிய மரத்தடியில் வீசிவிட்டுத் தப்பியோடினர்.
மறுநாள் காலையில் சடலத்தை மீட்ட போலீசார், அது இயற்கை மரணமல்ல என்பதை உடற்கூறாய்வு மூலம் உறுதி செய்தனர். விசாரணையின் தொடக்கத்தில் கணவனை பறி கொடுத்தது போல், அபிராமி கண்ணீர் வடித்து நாடகமாடினார். ஆனால், அந்தப் பகுதியில் இருந்த செல்போன் சிக்னல்கள் மற்றும் அபிராமியின் முன்னுக்குப் பின் முரணான பதில்கள் போலீசாரின் சந்தேகத்தை வலுப்படுத்தின. தனிப்படை போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், காதலன் பிரபுவின் தூண்டுதலால் இந்தக் கொலையைச் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த பிரபு நீதிமன்றத்தில் சரணடைந்தார்; அவரது நண்பர் சரவணனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.



