கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே சம்ப குளத்தில் கடந்த செப்.11ஆம் தேதி ஒரு பச்சிளம் குழந்தையின் சடலம் மிதப்பதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ராஜாககமங்கலம் போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தவறான உறவில் பிறந்த குழந்தைதான் இது என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. எனவே, அந்த குழந்தையின் தாயை கண்டறிய, அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சமீபத்தில் குழந்தை பெற்றவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர்.
விசாரணையில், ஈத்தாமொழி புதூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது ரேகா என்பவர் மீது போலீசுக்கு சந்தேகம் எழுந்தது. சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகம் வலுப்பெற்றது.
இதையடுத்து, அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், ரேகா தான் பெற்ற குழந்தையை இரக்கமின்றி கொன்றது தெரியவந்துள்ளது. ரேகாவுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில், ரேகா கர்ப்பமாகியுள்ளார்.
குழந்தை பிறந்தால் அவமானம் என நினைத்த ரேகா, குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்று, உடலை சம்ப குளத்தில் வீசியுள்ளார். ஆனால், குழந்தையின் சடலம் மிதந்ததால், இந்தக் கொலை வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ரேகாவை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.