பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்..
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ம் ஆண்டு பிறந்தவர் வா. மு. சேதுராமன். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.. நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம் உள்ளிட்ட பல நூல்களை சேதுராமன் இயற்றி உள்ளார். ஒரு லட்சத்திற்கும் அதிமான கவிதைகளை அவர் பதிப்பித்துள்ளார். பன்னாட்டு தமிழுறவு மன்றத்தை அவர் நிறுவினார்..
பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கவிமணி போன்ற பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்.. திருவள்ளுவர் விருது, கலைமாமணி விருது, சி.பா ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
சென்னை விருகம்பாக்கம், சின்மயா நகரில் அவர் வசித்து வந்தார்.. அவருக்கு வா.மு.சே திருவள்ளுவர், வா.மு.சே கவியரசன், வா.மு.சே ஆண்டவர், வா.மு.சே தமிழ் மணிகண்டன் என்ற மகன்களும், வா.மு.சே பூங்கொடி என்ற மகளும் உள்ளார்.
மறைந்த வா.மு சேதுராமனின் மறைவுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
முதலமைச்சர் ஸ்டாலின் வா.மு.சேதுராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனத் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து சொல்லொணாப் பெருந்துயர் என்னை ஆட்கொண்டது!
இன்றுகூட முரசொலியில், “ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமை நாட்டுவோம். தமிழர் ஒற்றுமையாய்த் திரண்டெழுந்தே வலிமை காட்டுவோம்!” எனக் கவிதை தீட்டியிருந்த அவர் இப்போது நம்மிடையே இல்லை என்பதைச் சிந்தை ஏற்க மறுக்கிறது.
“தமிழ் தமிழ் தமிழ் என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தன்னை ஒப்படைத்திருக்கின்ற ஒரு பெருமகனைக் காண வேண்டுமென்றால், அது பெருங்கவிக்கோ சேதுராமனைத் தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட பெருந்தகை அவர்!
தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சிறப்பு சேர்த்த செந்தமிழ்ச் செம்மல். தமிழ்ப்பணிக்கெனத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட அந்தத் தியாகச் சுடர் தனது ஒளியை நிறுத்திக் கொண்டு, வேதனை எனும் இருளில் நம் மனதைத் தவிக்கவிட்டிருக்கிறார்!
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட படைப்புகளைத் தமிழுலகிற்கு அளித்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களது புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்!
அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் – உறவினர்கள் – தமிழ்கூறு நல்லுலகின் சான்றோர்கள் – தமிழ்த் தொண்டர்கள் என அனவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த வா.மு. சேதுராமனின் இறுதிச்சடங்கு இன்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
Read More : பெரும் சோகம்… திமுகவின் மூத்த தலைவர் காலமானார்…! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!