கராத்தே பயிற்சிக்கு வரும் மாணவிகளின் தாய்மார்களை மயக்கி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பல பெண்கள் இவரால் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த அப்துல் வகாப் (37), கராத்தே மாஸ்டராக டவுன் கோடீஸ்வரன் நகர் மற்றும் பாளை கே.டி.சி. நகர் ஆகிய இடங்களில் பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்று வரும் 13 வயது சிறுமியின் தாயாருடன் அறிமுகமான அப்துல் வகாப், அவரது செல்போன் எண்ணைப் பெற்றுள்ளார். நாளடைவில், ஆசை வார்த்தைகள் கூறி அந்தப் பெண்ணுடன் நெருங்கிப் பழகி, தொடர்ந்து 4 ஆண்டுகளாக அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் கணவருக்குத் தெரியவந்ததால், அவர் அப்துல் வகாப்புடனான தொடர்பைத் துண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அப்துல் வகாப், அந்தப் பெண்ணின் வீட்டிற்கே சென்று, போன் அழைப்பை எடுக்காதது குறித்து வாக்குவாதம் செய்து, தன்னைத் தனியாக வந்து சந்திக்குமாறு மிரட்டியுள்ளார். இதனால், அந்தப் பெண் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் கூடினர். இதனைக் கண்ட அப்துல் வகாப் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், அப்துல் வகாப் தனது பயிற்சி மையத்திற்கு வரும் மாணவிகளின் தாய்மார்களை நோட்டமிட்டு, அவர்களை மயக்கி, பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டது தெரியவந்துள்ளது. சுமார் 8-க்கும் மேற்பட்ட பெண்கள் இவரால் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், அவமானத்திற்குப் பயந்து யாரும் புகார் அளிக்காமல் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அப்துல் வகாபை அதிரடியாக கைது செய்தனர். இவரால் பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.