ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் சமீபத்தில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து ஏழு மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு குறியீட்டின்படி, பள்ளிகள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவசரகால தயார்நிலை பயிற்சி அளித்தல் உள்ளிட்டவை கட்டாயம் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
தீ பாதுகாப்பு, அவசரகால வெளியேற்றங்கள் மற்றும் மின் வயரிங் ஆகியவற்றுடன் பள்ளி கட்டிடங்களின் கட்டமைப்பு முழுமையாக ஆராயவேண்டும் வேண்டும். முதலுதவி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளிட்ட அவசரகால தயார்நிலை குறித்து ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பயிற்சி பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும். தீயணைப்பு துறை, காவல்துறை மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் உடல் பாதுகாப்புடன் உடன், அவர்களின் மன ஆரோக்கியமும் மற்றும் உணர்ச்சி நலனும் முக்கியமானவை என்பதனை ஏற்று, அமைச்சகம் உளவியல் ஆலோசனை சேவைகள், சக மாணவர் ஆதரவு அமைப்புகள் மற்றும் சமூக ஈடுபாட்டு முயற்சிகளை உட்படுத்த முக்கியத்துவம் அளித்துள்ளது. இம்முயற்சிகள் மாணவர்களின் மனநலம் மற்றும் உணர்ச்சி நலனை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.
குழந்தைகள் அல்லது இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு ஆபத்தான சூழ்நிலை, தவறவைத்த நிகழ்வு அல்லது சம்பவம் ஆகியவற்றைத் தொடர்புடைய அதிகாரிகள் 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறை அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தாமதம், அலட்சியம் அல்லது நடவடிக்கை எடுக்கத் தவறுவது போன்ற சம்பவங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்த உத்தரவு, பெற்றோர்கள், பாதுகாவலர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் விழிப்புடன் இருக்கவும், பள்ளிகள், பொது இடங்கள் அல்லது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து முறைகளில் ஏதேனும் பாதுகாப்பற்ற நிலைமைகள் இருந்தால் அவற்றைத் தீவிரமாகப் புகாரளிக்கவும் ஊக்குவிக்கிறது.
தடுக்கக்கூடிய சூழ்நிலைகளால் எந்தவொரு குழந்தையோ அல்லது இளைஞரோ ஆபத்தில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை கல்வி அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியது. அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என கல்வித் துறைகள், பள்ளி வாரியங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
Readmore: உஷார்!. சந்தையில் ரசாயனம் கலந்த போலி உருளைக்கிழங்குகள் விற்பனை!. எப்படி கண்டறிவது?