ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்து டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கூடுதலாக 25% வரியை விதித்தார். ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரும் ஒரு நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
முன்னதாக ஜூலை 30 ஆம் தேதி, இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும், கூடுதலாக குறிப்பிடப்படாத அபராதமும் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார். ஆகஸ்ட் 1 முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று அவர் கூறியிருந்தார்..
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க உள்ள நிலையில், அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.. எனவே இனி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும்..
இந்தியாவுக்கு அதிக வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்ததை அடுத்து, இந்த வார தொடக்கத்தில் இந்திய அரசாங்கம் கடுமையான பதிலடியை வெளியிட்டது. வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் புது தில்லியை குறிவைத்து செயல்படுவதாக குற்றம் சாட்டியது. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேற்கோள் காட்டி, ட்ரம்ப் இந்தியாவிற்கு அளித்த அச்சுறுத்தல்களை நியாயமற்றது என்று வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டது.
முன்னதாக நேற்று அந்நாட்டு ஊடகத்திற்கு பேட்டியளித்த ட்ரம்ப் பேசிய ட்ரம்ப், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரிகளை ‘கணிசமாக உயர்த்தப் போவதாக’ கூறினார். மேலும் “இந்தியா ஒரு நல்ல வர்த்தக பங்காளியாக இல்லை, ஏனெனில் அவர்கள் எங்களுடன் நிறைய வணிகம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்வதில்லை. எனவே நாங்கள் 25 சதவீதத்தில் முடிவு செய்தோம், ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் அந்த விகிதத்தை நான் கணிசமாக உயர்த்தப் போகிறேன் என்று நினைக்கிறேன்,” என்று கூறியிருந்தார்..
தான் கூறியது போலவே தற்போது இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதித்து ட்ரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..