உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினமான இன்று, உலக சுகாதார அமைப்பு (WHO) எச்.ஐ.வி (HIV) தொற்றைத் தடுப்பதற்கான ஒரு புதிய மற்றும் புரட்சிகரமான மருந்து குறித்து விழிப்புணர்வு காணொளியை பகிர்ந்துள்ளது. இந்த மருந்து, ‘லெனாகேபாவிர்’ (Lenacapavir / LEN) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், எச்.ஐ.வி தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் 40 மில்லியன் பேர் பாதிப்பு :
உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் மேட்டோ புரோசாஸ்கா (Dr. Mateo Prochazka) வெளியிட்டுள்ள காணொளியில், “உலகில் மொத்தம் சுமார் 40 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி-யைக் கட்டுப்படுத்தப் பலரும் தொடர்ந்து முயன்று வரும் நிலையில், அவர்களுக்குத் தீர்வை அளிக்கும்படியான ஒரு புதிய தடுப்பு மருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2024ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக 1.3 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இனி ஒருவர் கூட புதிதாகப் பாதிக்கப்படாமல் தடுக்க, தொற்று அபாயம் உள்ளவர்கள் தினமும் ஒரு PrEP (Pre-Exposure Prophylaxis) மாத்திரை எடுத்துக்கொள்வது நல்ல தீர்வை வழங்கும்.
ஊசி வடிவில் ‘லெனாகேபாவிர்’ :
சிலருக்கு தினசரி மாத்திரை எடுத்துக்கொள்வதும், மருத்துவரைக் கலந்தாலோசிப்பதும் நடைமுறையில் சவாலாக இருக்கலாம். அப்படியானவர்களுக்கு தீர்வாகவே உலக சுகாதார அமைப்பு ‘லெனாகேபாவிர்’ (Lenacapavir / LEN) என்ற ஊசி மருந்தைப் பரிந்துரைக்கிறது.
இது ஊசி வடிவில் ஒருவருக்கு செலுத்தப்படும் மருந்து. தினசரி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள முடியாதவர்கள், 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த ஊசியை எடுத்துக்கொண்டால் போதுமானது. தற்போது வரை நம்மிடையே எச்.ஐ.வி-க்கான தடுப்பூசி இல்லாத நிலையில், இந்த லெனாகேபாவிர் ஊசி எச்.ஐ.வி-யைத் தடுப்பதற்கு மிகவும் சிறந்த முறையில் உதவுகிறது என்று டாக்டர் மேட்டோ தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி-யால் அதிகப் பாதிப்படைந்துள்ள மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய அல்லது இடைப்பட்ட நிலையிலுள்ள நாடுகளுக்கும் கிடைக்கும்படியாக இந்த ஊசி தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றும், எச்.ஐ.வி தடுப்பு முயற்சிகளில் இது ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.



