பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் இராவணன் நீக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாமகவில் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை மருத்துவர் ராமதாஸ் நியமித்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது வடிவேல் இராவணன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாமகவின் மாநிலப் பொதுச் செயலாளராக, முரளி சங்கர் இன்று முதல் (15.06.2026) நியமனம் செய்யப்படுகிறார். எனவே இவருக்கு நமது கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பொருளாளராக இருந்த திலகபாமா நீக்கப்பட்டு, சையத் மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டார். மேலும் வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவைத் தலைவராக இருந்த பாலு நீக்கப்பட்டு கோபு நியமிக்கப்பட்டார். தொடர்ந்து பாமகவில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்களை மாற்றி மருத்துவர் ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார்.
திருவள்ளூரில் இன்று நடைபெறும் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்கிறார். இதில் தொகுதி வாரியாக கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். அதே போல் தைலாபுரம் இல்லத்தில் பாமகவில் இணைக்கப்பட்ட வட மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்த உள்ளார். மகன் அன்புமணியி ஆதரவாளர்களை நீக்கி புது நிர்வாகிகளை நியமித்த ராமதாஸ், தன் பக்கம் இளம் தலைமுறையை இழுக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.