வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை வாரிசு அரசியலுக்காக துரோகி என சொல்லும் அளவுக்கு துணிந்துள்ளார் என மல்லை சத்யா வருத்தம் தெரிவித்துள்ளார்.
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கு, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, வைகோ முன்னிலையில் இருவரும் கை குலுக்கிக் கொண்டு சமாதானம் அடைந்தனர்.
இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தற்போது தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ தெரிவித்துள்ளார். ஆனால், வைகோவின் இந்த விமர்சனம் குறித்துப் பேசிய மல்லை சத்யா’ துரோகி பட்டம் கொடுத்து வெளியேற்ற பார்க்கிறார் வைகோ.
குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் கொடுக்கிறார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை வாரிசு அரசியலுக்காக துரோகி என சொல்லும் அளவுக்கு துணிந்துள்ளார் என வருத்தம் தெரிவித்துள்ளார்.
தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ” ஒரு முறை தலைவர் என்னிடம் கடலுக்கு போய்ட்டு வரலாமா என கேட்டார். தலைவர் சொன்னதற்கு மறுப்பு சொல்ல முடியாது என உடனே கிளம்பினோம். மாமல்லபுரம் கடலுக்கு படகு ஒன்றில் தலைவர் வைகோ, அவர் மருமகன் ராஜசேகரன், நான் எல்லாரும் சென்றோம். ரொம்ப தூரம் சென்ற பிறகு திரும்பினோம். வரும் போது கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது.
வழக்கத்தை விட அமாவாசை, பெளர்ணமி நாட்களில் சீற்றம் அதிகமாக இருக்கும். அன்றும் அது போல ஒரு நாள் தான். கடல் சீற்றத்தால் படகு தலைகீழா கவிழ்ந்தது. நாங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறோம்.. படகை திருப்ப முயற்சி செய்கிறோம். நாங்கள் படகு அருகில் இருக்கிறோம்.. ஆனால் தலைவர் வைகோவை கானோம். படகுக்கு கீழே மாட்டிக்கொண்டார்.
அவரை காப்பாற்ற முயன்றோம். அதற்கு கடல் அவரை இழுத்துச் சென்றது. எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை.. தலைவரை காப்பாற்ற வேண்டும் என்று கடல் உள்ளே புகுந்து அவரின் காலை பிடித்து வெளியே இழுத்தேன். ஒரு மணி நேரம் கழித்து அவர் குளித்துவிட்டு வெள்ளை பட்டு வேட்டி சட்டை அணிந்து வெளியே வந்து என் உயிரை நீ காப்பாற்றி விட்டாய் என சொன்னார். அப்போது மனம் உடைந்து அழுதுவிட்டேன்.. நான் அவ்வளவு எளிதில் அழக்கூடிய ஆள் கிடையாது” என்றார்.
வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றினேன் என பெருமை சூட்டும் மல்லை சத்யாவின் பேட்டிக்கு வைகோ பதிலடி கொடுத்துள்ளார். மாமல்லபுரம் கடலில் படகுக்கு அடியில் சிக்கிய என்னை காப்பாற்றியது மல்லை சத்யா தான்.. ஆனால் மூன்று முறை என் உயிரை காப்பாற்றியதாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்குறார். மீதம் இரண்டு எப்போது நடந்தது..? அதன் பிறகு என் உயிருக்கு எந்த ஆபத்தும் வரவில்லை என்றார்.