மார்கழி மாதத்தின் வளர்பிறையில் வரும் ஏகாதசி திதி, வைணவ மரபில் மிக உயரிய வழிபாட்டு தினமாக கருதப்படுகிறது. ஏகாதசி என்பது வெறும் ‘பதினோராம் நாள்’ என்பதை கடந்து, மனிதனின் 5 ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள் மற்றும் மனம் ஆகிய பதினொன்றையும் ஒருநிலைப்படுத்தி இறைவனுடன் ஐக்கியமாவதை குறிக்கிறது. இந்த விரதத்தின் சிறப்பம்சமாக திகழும் ‘சொர்க்கவாசல்’ திறப்பிற்குப் பின்னால் சுவாரஸ்யமான ஒரு புராண கதை மறைந்துள்ளது.
புராணங்களின்படி, திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றிய பிரம்மா, படைப்பு தொழிலில் தனக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வம்கொண்டார். பிரம்மனின் இந்த அகந்தையை அடக்கத் திருவுளம் கொண்ட மகாவிஷ்ணு, மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்களை தோற்றுவித்தார். திருமாலின் ஆணைப்படி, அவ்விரண்டு அரக்கர்களும் பிரம்மனிடமிருந்த வேதங்களை பறித்து, அவரது படைப்பு தொழிலுக்கு இடையூறு விளைவித்தனர்.
ஒருகட்டத்தில் துயரம் தாளாத பிரம்மா, தனது தவறை உணர்ந்து திருமாலிடம் சரணடைந்தார். ‘பணி உயர்வால் கர்வம்கொள்ளக் கூடாது; கடமையை விருப்பத்துடன் செய்ய வேண்டும்’ என பிரம்மனுக்கு அறிவுரை வழங்கிய திருமால், அரக்கர்களை அழிக்க முன்வந்தார். திருமாலுடன் போரிட்ட அரக்கர்கள், ஒருகட்டத்தில் அவரது கருணையால் கவரப்பட்டு, ‘தங்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்’ என வேண்டினர். புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வைகுண்டத்தின் கிழக்கு வாசல் வழியாக நுழைய முடியும் என்ற நியதி உள்ள நிலையில், பாவம் செய்த அந்த அரக்கர்களை வைகுண்டத்திற்குள் அழைத்துச் செல்ல திருமால் ஒரு புதிய உபாயத்தை கையாண்டார்.
வைகுண்டத்தின் வடக்கு திசையில் ஒரு பிரத்யேக வாசலை உருவாக்கி, அதன் வழியாக அவர்களைத் தன்னுள் ஆட்கொண்டார். அந்த வடக்கு வாசலே இன்று நாம் தரிசிக்கும் ‘சொர்க்கவாசல்’ அல்லது ‘பரமபத வாசல்’ ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த வாசல் திறக்கப்படுவது, இறைவனின் எல்லையற்ற கருணையை உணர்த்துகிறது. அரக்கர்களுக்கே முக்தி அளித்த அந்தப் பரந்தாமன், கலியுகத்தில் பாவங்களுடன் தவிக்கும் தங்களையும் அந்த வாசல் வழியாகத் தன்னுள் அழைத்துக்கொள்வார் என்ற நம்பிக்கையிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாகக் கடந்து பெருமாளைத் தரிசிக்கின்றனர். இது வெறும் சடங்காக மட்டுமன்றி, மனிதன் தனது கர்வத்தை விடுத்து இறைவனிடம் முழுமையாக சரணடைவதற்கான ஒரு ஆன்மீக பயணமாகவும் பார்க்கப்படுகிறது.
Read More : இன்று வைகுண்ட ஏகாதசி.. பாவங்கள் நீங்கி, மோட்சம் பெற.. பெருமாளுக்கு இப்படி விரதம் இருங்க..!



