இந்திய சதுரங்க உலகுக்கு பெருமை சேர்த்த சாதனையாக, தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை வைஷாலி 2025 FIDE Women’s Grand Swiss போட்டியை வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக (2023 மற்றும் 2025) பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம், வரவிருக்கும் 2026 மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் தன்னுடைய இடத்தை உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் தகுதி பெற்ற நிலையில், வைஷாலி மூன்றாவது இந்தியராக வேட்பாளர்களில் இணைந்துள்ளார். இது இந்திய மகளிர் சதுரங்க வரலாற்றில் மிகப்பெரிய திருப்பமாக கருதப்படுகிறது. ஓபன் பிரிவோ, மகளிர் பிரிவோ இதுவரை யாரும் FIDE Grand Swiss பட்டத்தை இருமுறை வென்றதில்லை. வைஷாலி இதை சாதித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை தக்கவைத்துள்ளார்.
வைஷாலியின் வெற்றிக்கு பின், சதுரங்க ஜாம்பவான் விஷ்வநாதன் ஆனந்த் சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்து, “உலக பட்டத்தை நோக்கி அவளை வழிநடத்தியதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். அவளின் உறுதியும் கடின உழைப்பும் பாராட்டத்தக்கவை. இரண்டு முறை கிராண்ட் சுவிஸ் வெல்வது சிலரால் மட்டுமே சாத்தியம்” எனக் குறிப்பிட்டார்.
இந்த வெற்றிக்கு முன்பு, சென்னை GM போட்டியில் தொடர்ந்து 7 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால், இந்த ஆண்டு FIDE Grand Swiss-இல் பங்கேற்க வேண்டுமா என சந்தேகத்தில் இருந்தார் வைஷாலி. ஆனால் அவரது குடும்பம், குறிப்பாக சகோதரர் பிரக்ஞானந்தா அளித்த ஊக்கத்தால், மன உறுதியை மீட்டெடுத்து மீண்டும் எழுந்தார்.
இறுதிக்கு முந்தைய சுற்றில், முன்னாள் உலக சாம்பியனான உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா முசிச்சுக்கை வீழ்த்தினார். இறுதி சுற்றில், முன்னாள் உலக சாம்பியனான சீனாவை சேர்ந்த டான் ஜோங்கிக்கு எதிராக கருப்பு காய்களுடன் டிரா எடுத்தார். இதன் மூலம், அவர் கூட்டு முன்னிலை பெற்று, 2025 Women’s Grand Swiss சாம்பியன் பட்டத்தை உறுதிப்படுத்தினார்.