திருமாலின் 108 திவ்ய தேசங்களில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த தலங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் வித்தியாசமான தோற்றத்தையும், சடங்குகளையும் கொண்டதாக கருதப்படுவது காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கள்வனூரில் உள்ள “கள்வப் பெருமாள் கோவில்.
இத்தல மூலவர், ஆதிவராகப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் ஒரு சைவ திருக்கோவிலான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குள் அமைந்துள்ளது. இது, வைணவத்தையும் சைவத்தையும் இணைக்கும் அரிய எடுத்துக்காட்டு. இந்த தலத்தில் பெருமாள் மிகச் சிறிய வடிவில் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரை வணங்கிய நிலையில், மகாலட்சுமி அவர் அருகில் காட்சி தருவதாக கூறப்படுகிறது. மேலும், காமாட்சி அம்மன் கருவறை சுவரிலே ஒரு அரூப மகாலட்சுமி உருவமும் காணப்படுகிறது.
திருக்கள்வனூரில் உள்ள கள்வப் பெருமாளையும், காமாட்சி அம்மனையும் சேர்ந்து வேண்டினால், அண்ணன்-தங்கை உறவு சிறப்பாக அமையும் என்ற ஐதீகம் பிரசித்தி பெற்றது. இங்கு அம்மனே பிரதான தெய்வமாக உள்ளதால், பெருமாளுக்கான விழாக்கள், தனியான பூஜைகள், உற்சவங்கள் எதுவும் இல்லை. திருமங்கையாழ்வார் மட்டுமே இத்தலத்திற்கு மங்களாசாசனம் செய்துள்ளதால், இது திவ்யதேசங்களில் 55வது தலமாக அடையாளம் பெற்றுள்ளது. இது மற்ற தலங்களுடன் ஒப்பிடும்போது சிறப்பும் தனித்துவமும் வாய்ந்தது.
ஒருமுறை வைகுண்டத்தில் திருமாலுக்கும் திருமகளுக்கும் இடையே அழகு குறித்து வாதம் நிகழ்ந்தது. மகாலட்சுமி அழகில் கர்வம் கொண்டதாக கருதிய திருமால், அவருக்கு “அரூபமாக” ஆகும் சாபம் அளித்தார். இந்த சாபத்திலிருந்து மீள, நூறு தவங்கள் செய்வதைவிட பலன் தரும் தலத்தில் தவம் செய்யுமாறு கூறினார். அதன்படி மகாலட்சுமி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தலத்தில் தவம் செய்து, முன்பை விட கூடுதல் அழகுடன் மீண்டும் தோன்றியதாக புராணம் கூறுகிறது.
இந்த அழகை “கள்ளமாக” கண்டு ரசித்த பெருமாளுக்கு “கள்வப் பெருமாள்” என்ற திருநாமம் ஏற்பட்டது என்பது சிறப்பான செய்தி. இத்தலத்தில் பெருமாளுக்கே தனி நைவேத்யம் இல்லாததால், காமாட்சி அம்மனுக்காக தயாராகும் தயிர் சாதமே பெருமாளுக்கும் படைக்கப்படுகிறது. அம்மனுக்குப் பூஜை செய்யும் அர்ச்சகர்களே பெருமாளுக்கும் பூஜை செய்கிறார்கள். பெருமாளுக்கு தனி உற்சவங்களோ, பிரம்மோற்சவங்களோ இல்லை. முக்கியமாக, வைகுண்ட ஏகாதசி மற்றும் நவராத்திரி ஆகிய விழாக்கள் மட்டுமே இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
Read more: அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்.. ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!!