மத்திய உள்துறை அமைச்சகம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் கல்வி நிறுவன நிகழ்வுகளில் தேசிய கீதத்திற்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவத்தை இனி தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் வழங்க வேண்டும் என மத்திய அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய வழிகாட்டுதலின்படி, இனி வரும் காலங்களில் அனைத்து அரசு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில், ‘ஜன கண மன’ இசைக்கப்படுவதற்கு முன்பாகவே ‘வந்தே மாதரம்’ பாடப்பட வேண்டும். மிக முக்கியமாக, தேசிய கீதம் பாடப்படும்போது நாம் காட்டும் அதே மரியாதையை வந்தே மாதரம் பாடலுக்கும் காட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, இப்பாடல் இசைக்கப்படும்போது அங்கிருக்கும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அல்லது ஆளுநர்கள் பங்கேற்கும் விழாக்களில் அவர்கள் வருகையின் போதும், விடைபெறும் போதும் இப்பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என்றும், தேசியக் கொடி அணிவகுப்புகளிலும் வந்தே மாதரம் இடம் பெற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இப்பாடலின் நீக்கப்பட்ட நான்கு பத்திகளையும் மீண்டும் இணைத்திருப்பதுதான். 1875-ல் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய இந்தப் பாடலில், இந்து தெய்வங்களான துர்க்கை மற்றும் லட்சுமி குறித்த குறிப்புகள் இருந்த காரணத்தால், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் இது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்காது என ரவீந்திரநாத் தாகூர் போன்றோர் கருத்தறிவித்தனர்.
இதன் விளைவாக, 1937-ல் காங்கிரஸ் கமிட்டியால் இறுதி நான்கு பத்திகள் நீக்கப்பட்டு முதல் இரண்டு பத்திகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், சுமார் 88 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தடையை நீக்கி தற்போது அனைத்து 6 பத்திகளையும் முழுமையாகப் பாட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்தப் பாடலை இசைப்பதற்கான கால அளவையும் மத்திய அரசு முறைப்படுத்தியுள்ளது. முழுமையான 6பத்திகளையும் சேர்த்து மொத்தம் 190 வினாடிகளில் (அதாவது 3 நிமிடம் 10 வினாடிகளில்) பாடி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களான திரையரங்குகளில் இந்தப் பாடலை இசைக்கலாம் என்றாலும், அங்கு எழுந்து நின்று மரியாதை செய்வது கட்டாயமில்லை என சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
Read More : பணம் சம்பாதிப்பது எப்படி..? 115 ஆண்டுகளுக்கு முன்பே வெளியான ரகசிய புத்தகம்..!!



