உலகின் மிக வயதான யானையான வத்சலா, 109 வயதில் மத்திய பிரதேச மாநிலம் பன்னா புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தது.
ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பன்னா புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளமாக இருந்தது. அது காப்பகத்தில் உள்ள மற்ற யானைகள் குழு அனைத்தையும் வழிநடத்தியது. காப்பகத்தில் உள்ள மற்ற பெண் யானைகள் குட்டிகளைப் ஈன்றெடுக்கும் போது, ‘வத்சலா’ அந்த குட்டிகளை கவனித்துக்கொண்டது. வயது முதிர்வு காரணமாக, சமீப காலமாக இந்த யானை பார்வையை இழந்த நிலையில் தற்போது உயிரிழந்தது.
வத்சலா யானையின் கடைசி தருணங்களை இன்ஸ்டாகிராமில் சுதிர் சிவராம் என்ற பயனர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “உலகின் பழமையான ஆசிய யானையான வத்சலா, பன்னா புலிகள் காப்பகத்தில் 109 வயதில் உயிரிழந்தது. பூங்கா மூடப்படுவதற்கு சற்று முன்பு, ஜூன் 28, 2025 அன்று அதைப் பார்த்து வீடியோ எடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. வீடியோவில், வத்சலா அசையாமல் அப்படியே நின்றது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர முயற்சிக்கும்போது அதன் கண்களில் சோர்வு தெரிந்தது” என பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர், “ஒரு காலத்தில் வலிமையுடன் கம்பீரமாக நடந்து சென்ற வத்சலா இன்று நகரக் கூட முடியாமல் இருக்கிறது” என வருத்தம் தெரிவித்தார். மற்றொரு பயனர், “பன்னா புலிகள் காப்பகத்தில் வத்சலா தனது இறுதி மூச்சை எடுத்த அந்த தருணத்தில் நான் அங்கே இருந்தேன். உலகின் மிகப் பழமையான யானை அது. அத்தகைய ஒரு கம்பீரமான ஆன்மாவின் மறைவைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்” என கூறியிருந்தார்.
Read more: அது என்ன திமுக பணமா? இனியும் இது தொடர்ந்தால் மாபெரும் போராட்டம் நடக்கும்.. விஜய் எச்சரிக்கை..