தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், தகுதியுள்ள மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று நடப்பு ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த மாதமே தொடங்கி வைக்க உள்ளார்.
மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் எல்காட் நிறுவனம் மூலம் இந்தத் திட்டத்திற்கான டெண்டர் கோரப்பட்டு, தற்போது 3 பன்னாட்டு நிறுவனங்களுக்கு லேப்டாப் தயாரிப்புப் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஒரு லேப்டாப்புக்குத் தமிழக அரசு ரூ. 22,000 ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த லேப்டாப்கள் மாணவர்களின் எதிர்காலத் தேவைக்கு ஏற்ப நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட உள்ளன. குறிப்பாக, 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்எஸ்டி ஹார்ட் டிஸ்க், மற்றும் கோபிலட் (Co-pilot) எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) வசதி ஆகியவை இதில் இடம்பெற இருக்கும் எனக் கூறப்படுகிறது.
முதல் கட்டமாக ஒரு லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் விநியோகிக்கப்படும். அதைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தகுதியுள்ள 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கும் பணியை நிறைவு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை, உயர்கல்வி மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Read More : கார்த்திகை மாத பௌர்ணமியின் சிறப்பு..!! இந்த 3 பொருட்களை வாங்கினால் வீட்டில் செல்வம் அள்ள அள்ளக் குறையாது..!!



