செப்டம்பர் 22ஆம் தேதி முதல், பேக்கேஜ் செய்யப்பட்ட UHT பால் மீதான ஜிஎஸ்டி வரி 5%இல் இருந்து 0% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அமுல், மதர் டெய்ரி போன்ற முன்னணி பால் நிறுவனங்களின் UHT பால் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. அமுல் கோல்டு பாலின் விலை லிட்டருக்கு ரூ.69-இல் இருந்து ரூ.65 ஆகவும், மதர் டெய்ரி டோன்ட் பாலின் விலை ரூ.57-லிருந்து ரூ.54 ஆகவும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவை வரவேற்றுள்ள அமுல் மற்றும் மதர் டெய்ரி நிறுவனங்கள், ஜிஎஸ்டி குறைப்பின் முழுப் பலனையும் நுகர்வோருக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளன. பால் விலை குறைவதால், பாலுக்கான தேவை அதிகரித்து, பால் உற்பத்தித் துறையும் வளர்ச்சி அடையும் என நிறுவனங்கள் நம்புகின்றன. இந்த நடவடிக்கை, பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பெரிய பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
UHT (Ultra-High Temperature) முறையில், பால் மிக அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தப்பட்டு உடனடியாகக் குளிர்விக்கப்படும். இதனால், பாலில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, அது நீண்ட நாட்களுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும். இது பெரும்பாலும் டெட்ரா பேக் அல்லது கார்ட்டன் போன்ற பேக்கேஜிங்கில் விற்கப்படுகிறது. பவுச் பாலுக்கு ஏற்கனவே ஜிஎஸ்டி விலக்கு உள்ளது.
அமுல் மற்றும் மதர் டெய்ரியின் எதிர்பார்ப்பு விலைப் பட்டியல் :
அமுல் பால் விலைகள்:
அமுல் கோல்ட் (ஃபுல் க்ரீம்): ஒரு லிட்டர் ரூ.69-லிருந்து ரூ.65 – ரூ.66 ஆகக் குறையும்.
அமுல் ஃப்ரெஷ் (டோன்ட்): ஒரு லிட்டர் ரூ.57-லிருந்து ரூ.54 – ரூ.55 ஆகக் குறையும்.
அமுல் டீ ஸ்பெஷல்: ஒரு லிட்டர் ரூ.63-லிருந்து ரூ.59 – ரூ.60 ஆகக் குறையும்.
அமுல் எருமை பால்: ஒரு லிட்டர் ரூ.75-லிருந்து ரூ.71 – ரூ.72 ஆகக் குறையும்.
அமுல் பசுவின் பால்: ஒரு லிட்டர் ரூ.58-லிருந்து ரூ.55 – ரூ.57 ஆகக் குறையும்.
மதர் டெய்ரி பால் விலைகள் :
மதர் டெய்ரி ஃபுல் க்ரீம்: ஒரு லிட்டர் ரூ.69-லிருந்து ரூ.65 – ரூ.66 ஆகக் குறையும்.
மதர் டெய்ரி டோன்ட் மில்க்: ஒரு லிட்டர் ரூ.57-லிருந்து ரூ.55 – ரூ.56 ஆகக் குறையும்.
மதர் டெய்ரி எருமை பால்: ஒரு லிட்டர் ரூ.74-லிருந்து ரூ.71 ஆகக் குறையும்.
மதர் டெய்ரி பசுவின் பால்: ஒரு லிட்டர் ரூ.59-லிருந்து ரூ.56 – ரூ.57 ஆகக் குறையும்.
பால், சீஸ் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான வரி நீக்கம், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்குப் பெரும் நிவாரணத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



