தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில வட்டங்களுக்கு செப்டம்பர் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை மற்றும் இளையான்குடி ஆகிய நான்கு வட்டங்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார். இந்த விடுமுறை, அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த நிகழ்வு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், இரு மாவட்டங்களிலும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழாய்வு அருங்காட்சியகத்திற்கும் செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதி அளிக்கப்படும் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், செப்டம்பர் 20ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்ட நான்கு வட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களும் வழக்கம்போல இயங்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Read More : அடிக்கடி ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவரா நீங்கள்..? 18% GST..!! இனி ஒரு பிரியாணி எவ்வளவு தெரியுமா..?