சர்வதேச சந்தை நிலவரங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் சூழலில், தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வழங்கப்படும் தங்க நகைக்கடனின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அவசர தேவைக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கில், ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ. 6,000-இல் இருந்து ரூ. 7,000 ஆக உயர்த்தி வழங்க கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
தேசிய அளவிலான வர்த்தக வங்கிகளைப் போலவே, கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பொதுமக்கள் தங்கள் அவசரத் தேவைக்காக நகைக் கடன்களை எளிதில் பெறுகின்றனர். முறையான ஆவணச் சிக்கல்கள் குறைவாக இருப்பதால், இந்தச் சங்கங்கள் நகைக்கடன் வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் மாநில, மாவட்டத் தலைமை வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்கள் மூலம் நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதற்கு ஏற்ப, தற்போது கூட்டுறவு வங்கிகள் ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ. 6,000 வரை கடன் வழங்குகின்றன. இந்நிலையில், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருவதால், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 11,800 என்ற உச்சத்தில் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வின் காரணமாக, நகைக் கடனுக்கு வழங்கப்படும் தொகையை அதிகரிப்பது குறித்துச் சமீபத்தில் கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் கூடி ஆலோசித்தனர்.
இந்தக் கூட்டத்தில், கிராமுக்கு ரூ. 7,000 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விரைவில் பிறப்பிப்பார் என்றும், அடுத்த வாரம் முதல் புதிய கடன் தொகை அமலுக்கு வரும் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, நகை தயாரிப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்திய அரசிடம் ஒரு முக்கியக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பண்டிகைக் காலச் சலுகையாக, தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள 6 சதவீத வரியை 2 சதவீதமாகவும், தங்க நகைகளுக்கான 3 சதவீத ஜிஎஸ்டி வரியை 1.5 சதவீதமாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டால், ஒரு சவரனுக்கு சுமார் ரூ. 3,500 வரை விலை குறையும் என்றும், இது பண்டிகைக் காலத்தில் மக்கள் குறைந்த விலையில் தங்க நகைகள் வாங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நகை தயாரிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Read More : AI-யால் உங்கள் வேலை பறிபோகும் என்று பயமா..? இந்த வேலைகளை கற்றுக்கொண்டால் நீங்கள் தான் ராஜா..!!