ஹைதராபாத்தை சேர்ந்த 76 வயதான பெண் மருத்துவர் ஒருவர், சைபர் குற்றவாளிகளின் மிரட்டலால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வு பெற்ற அந்த மருத்துவர், கடந்த 5ஆம் தேதி தனது மொபைலுக்கு வந்த வாட்ஸ்அப் வீடியோ அழைப்பை எடுத்துப் பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர், பெங்களூரு போலீஸ் சீருடையில் இருந்ததோடு, உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் முத்திரைகள் கொண்ட போலி ஆவணங்களைக் காட்டி மிரட்டியுள்ளார்.
அந்த நபர், ‘ஒருவரைக் கடத்தியதாக உங்கள் மீது புகார் வந்துள்ளது. அதனால் உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளோம். நீங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் தான் வழக்கில் இருந்து விடுவிப்போம்’ என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் மருத்துவர், மறுநாள் தனது ஓய்வூதியக் கணக்கில் இருந்து ரூ.6.60 லட்சத்தை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த வங்கி கணக்கு மகாராஷ்டிராவில் இருந்ததாக தெரிகிறது.
பணம் கொடுத்த பிறகும், அவருக்கு தொடர்ந்து வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் வந்துள்ளன. சுமார் 70 மணி நேரத்திற்கும் மேலாக மிரட்டப்பட்டதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்தது கூட தெரியாமல், அந்த மர்ம நபர்களிடம் இருந்து அவரது வீடியோ அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சைபர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Read More : Just Now | இனி பனை மரம் வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்..!! தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!!



