கொல்கத்தாவில் உள்ள ஒரு மொபைல் போன் பழுதுபார்க்கும் கடையில் ஒரு இளம் பெண்ணின் தனிப்பட்ட வீடியோக்கள் கசிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இளம்பெண்ணுக்கு இடைவிடாத துன்புறுத்தல் மற்றும் குடும்பப் பிரிவினைக்கு வழிவகுத்தது. சமூக ஊடகங்களில் தனக்கு ஏற்பட்ட துயரத்தை பாதிக்கப்பட்ட பெண் பகிர்ந்துள்ளார். மொபைல் சரிசெய்யும் சாதாரண பணியாக தொடங்கிய இந்த நிகழ்வு, அவளது தனிப்பட்ட உறவுகள் மற்றும் மனநலத்தை முற்றிலும் அழித்து, ஒரு நரகமாக மாறியுள்ளது.
அதாவது, அந்த பெண் தனது மொபைல் போனை தொழில்நுட்ப உதவிக்காக கொல்கத்தாவில் உள்ள ஒரு உள்ளூர் பழுதுபார்க்கும் கடைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இருப்பினும், சாதனத்தை சரிசெய்வதற்குப் பதிலாக, கடையின் ஊழியர்கள் அவரது தனிப்பட்ட வீடியோக்களை அனுமதியின்றி ஆன்லைனில் பரப்பியதாக கூறப்படுகிறது. இதன் பிறகு, ஆயிரக்கணக்கான துன்புறுத்தல் செய்திகள் அப்பெண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன, இதனால் அந்த பெண் கடுமையான மனஅழுத்தங்களையும் சமூக தனிமையையும் சந்தித்துள்ளார்.
Reddit-இல் Prior_Jackfruit4428 என்ற பெயரில் தனக்கு நேர்ந்த துயரங்களை அப்பெண் பதிவு செய்துள்ளார். “நான் இப்போது முற்றிலும் உடைந்துவிட்டேன்… அப்போதிருந்து என் பெற்றோர் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்… நான் எனது அனைத்து சமூக ஊடகக் கணக்குகளையும் நீக்கிவிட்டேன், எனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டேன், அனைவரிடமிருந்தும் என்னை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டேன்.”
மேலும், துன்புறுத்தல் மிகவும் கடுமையானதாக இருந்ததால், அவள் தனது அறைக்குள் தன்னை அடைத்துக்கொண்டாள், அனைத்து சமூக தொடர்புகளையும் தவிர்த்து, தனது மொபைல் போனைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக கைவிட்டதாக கூறப்படுகிறது.
“நான் இனி என் அறையை விட்டு வெளியே செல்வதில்லை, மக்களை சந்திக்க விரும்பவில்லை, என் தொலைபேசி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன்… என் முழு வாழ்க்கையும் சரிந்துவிட்டதாக உணர்கிறேன், இதிலிருந்து நான் எப்படி மீள்வேன் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் எழுதினார், தனக்கு வந்த செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து கொண்டார். தனது “நம்பிக்கை, தனியுரிமை மற்றும் நற்பெயர் அழிக்கப்பட்டுவிட்டது” என்று உணர்ந்ததாக அந்த இளம் பெண் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். மேலும், தனியுரிமை மீறல் தொடர்பாக அந்தப் பெண் சைபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.