சிவகங்கையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழகத்தின் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்தவர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலை உடைக்க வந்தவர்கள் பாதியிலேயே முடங்கிப் போன வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் விஜய்யின் வருகை மற்ற கட்சிகளிடையே பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வந்தவர்களின் தற்போதைய நிலையைச் சாடிய நாஞ்சில் சம்பத், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தார். “ஒரு காலத்தில் திமுகவை எதிர்த்துப் பேசி, தொலைக்காட்சியை உடைப்பேன் என்று வீரவசனம் பேசிய கமல், இன்று அதே திமுகவின் அறிவாலய வாசலில் தஞ்சம் அடைந்துள்ளதை காண்கிறோம்” என்றார். அத்தகைய சந்தர்ப்பவாத அரசியல் போலல்லாமல், விஜய்யின் அரசியல் பயணம் உறுதியானதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
விஜய்யிடம் சில அனுபவ குறைபாடுகளோ அல்லது பலவீனங்களோ இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அவரது பொதுக்கூட்டங்களுக்கு திரளும் மக்கள் கடலைப் பார்த்தாலே மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஆத்திரம் பிறக்கிறது. அந்த ஆத்திரமே விஜய்யின் பலத்திற்குச் சான்று என்று குறிப்பிட்டார். விஜய்யைத் தேடி வரும் இந்த மக்கள் கூட்டம் வெறும் வாக்குகளாக மட்டும் இல்லாமல், திராவிட கட்சிகளின் அடித்தளத்தையே அசைக்கும் ஒரு வேட்டாக அமையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.



