கரூர் சம்பவத்துக்குப் பிறகு பொதுமக்களை சந்திக்காமல் இருந்த தவெக தலைவர் விஜய், இன்று காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2,000 தவெக தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்த விஜய் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தவெகவின் தேர்தல் அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள் குறித்து விஜய் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், ‘தனிப்பட்ட முறையில் திமுக மீது எந்த வன்மமும் இல்லை. மக்களிடம் பொய் சொல்லி விட்டு ஓட்டு வாங்கி விட்டு ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றியது திமுக. தவெகவுக்கு கொள்கையில்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். மக்களிடம் செல் என்ற அண்ணாவின் கொள்கையை மறந்தது யார்? திமுகவின் கொள்கையே கொள்ளை தான்” என்று விமர்சித்தார்.
த.வெ.க.விற்கு கொள்கையில்லை என பேசுகிறார் தமிழக முதலமைச்சர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள த.வெ.க.விற்கு கொள்கை இல்லையா? கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என கூறிய த.வெ.க.விற்கு கொள்கை இல்லையா? என பேசினார்.
தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தவெகவின் தேர்தல் அறிக்கை குறித்து பேசுகையில், வீட்டுக்கு ஒருவர் கட்டாய பட்டப்படிப்பு கட்டாயம் படிக்க வேண்டும். அனைவருக்கும் நிரந்த வீடு, வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்த வருமானம் கிடைக்க உறுதி செய்யப்படும் என்றார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். என்ன நடவடிக்கை என்பதை தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடுவோம் என்றார்.



