தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிலவும் அரசியல் சூழல் குறித்து, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பான ஐ.டி.பி.ஐ. (IDPI) நடத்திய விரிவான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த 61-வது கள ஆய்வு முடிவுகளை அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் விளக்கினார்.
இந்த ஆய்வின்படி, அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்க யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்ற கேள்விக்கு, 55 சதவீத மக்கள் மீண்டும் மு.க.ஸ்டாலினுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயமாக, நடிகர் விஜய் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். எனினும், திமுக அரசின் செயல்பாடு குறித்த கேள்வியில், 54 சதவீதம் பேர் திருப்தியில்லை என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 2021 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என 47 சதவீதம் பேர் கருத்துப் பகிர்ந்துள்ளனர்.
அரசியல் களத்தில் விஜய்யின் வருகை யாருக்குப் பாதிப்பு என்ற கேள்விக்கு, திமுக-வுக்கே அதிக பின்னடைவு ஏற்படும் என்றும், அதனைத் தொடர்ந்து விசிக மற்றும் அதிமுக-வுக்கு பாதிப்புகள் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக-வை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி வளர்ச்சியடையவில்லை என 60 சதவீதத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், இளம் வாக்காளர்களை கவர்வதில் விஜய் முதலிடத்திலும், அண்ணாமலை இரண்டாம் இடத்திலும் உள்ளனர். சீமான் சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்று 69 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், தேர்தல் முடிவுகளில் அவர் நான்காம் இடத்தையே பிடிப்பார் என ஆய்வு கூறுகிறது.
வாக்கு சதவீத கணக்கீட்டின்படி, திமுக 30.62 சதவீத வாக்குகளுடன் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 26.39 சதவீத வாக்குகளையும், முதல் தேர்தலை சந்திக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 21.07 சதவீத வாக்குகளையும் பெறக்கூடும் எனத் தெரிகிறது. நான்கு முனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ள சூழலில், தவெக வலுவான கூட்டணியை அமைத்தால் இரண்டாம் இடத்தைப் பிடிக்கவும், அதிமுக அந்த இடத்திற்காக கடும் போராட்டத்தை சந்திக்கவும் நேரிடும் என இந்த ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.
Read More : உங்கள் மகளின் திருமண கவலையை தீர்க்கும் ஜாக்பாட் திட்டம்..!! வட்டி மட்டுமே ரூ.50,00,000 கிடைக்கும்..!!



