தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏறப்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்கு பிறகு தவெக விஜய், வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
வீடியோவில் விஜய் கூறியதாவது: “ஏறத்தாழ 5 மாவட்டங்களுக்கு பிரச்சாரத்திற்கு சென்றோம். அங்கு எதுவும் நடக்கவில்லை. ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படியாக நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். சி எம் சார்.. பலி வாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டும் என்றாலும் செய்ங்க.. என் தொண்டர்களை ஒன்னும் செய்யாதீங்க.. என் நண்பர்களே, நமது அரசியல் பயணம் இன்னும் வலிமையாகவும் தைரியத்தோடும் தொடரும்.” என கூறியிருந்தார்.
அவரது வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் விஜயின் கருத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “விஜய் பேசியது திரைப்பட வசனம் போல உள்ளது. இது நல்ல அணுகுமுறை அல்ல. ‘சிஎம் சார்’ எனச் சொல்வது சிறுவன் பேசியது போல் தான். வீடியோவைப் பார்த்தால், அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பதை தெளிவாக பார்க்க முடிகிறது. நெரிசல் அதிகமாக இருந்ததால்தான் பலர் பலியாகினர்.
கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் இல்லை; மிதித்ததில் ஏற்பட்ட காயங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிகழ்வை பொறுத்தவரை, விஜய் அந்த இடத்திற்கு பரப்புரைக்குச் சென்றதால் தான் இது நடந்தது. இல்லையேல், இது நிகழ்ந்திருக்காது. திரைக்கவர்ச்சி, திரை மயக்கம் காரணமாக கூட்டத்தில் பலர் பாதிக்கப்பட்டனர். இனிமேல் இதுபோன்று நடக்காது.” எனக் கூறினார்.