2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் நியமிக்கப்படுவதாக தவெக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் செயற் குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு கட்சி தலைவர் விஜய் பகல் 12 மணிக்கு வந்தார்.
தொடர்ந்து கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கொள்கை தலைவர்கள் சிலைகளுக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். இதையடுத்து செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் நியமிக்கப்படுவதாக தவெக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தவெக தலைமையில் கூட்டணி அமைக்க ஏற்றுக்கொண்ட கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணி தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜக்கே முழு அதிகாரம் உள்ளது.
சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விதமாக செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் டிசம்பவர் மாதம் வரை விஜய் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் 2 வது மாநாடு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விஜய் அரசியல் கட்சியை தொடங்கியது முதல் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற கேள்விகள் எழுந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியி இணைவாரா..? அல்லது திராவிட கூட்டணியில் இணைவாரா..? என்ற சந்தேகம் வலுத்த நிலையில் தவெக தலைமையில் கூட்டணி அமையும் என தீர்மானம் நிறைவேற்றி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.



