தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்பவும், அரசியல் மாற்றங்களை நிகழ்த்தவும் ஊடகங்களை ஒரு பெரும் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றன. அந்தப் பாரம்பரிய பாதையில் தற்போது நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனது முதல் அடியை எடுத்து வைக்கத் தயாராகி வருகிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தனது அரசியல் நிலைப்பாடுகளையும், செயல்பாடுகளையும் மக்களிடம் சமரசமின்றி கொண்டு செல்ல சொந்தமாக ஒரு செய்தித் தொலைக்காட்சியை (News Channel) தொடங்க அல்லது ஏற்கனவே இயங்கி வரும் ஒரு சேனலை வாங்க தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
இந்த ஊடக விரிவாக்கத்திற்காக தமிழகத்தின் இரண்டு முன்னணிச் செய்தி தொலைக்காட்சிகளுடன் தவெக தரப்பு ரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு சேனல் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பக் கட்டமைப்பில் பின்தங்கியிருப்பது அந்தத் தரப்பிற்குச் சற்றுத் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு சேனலுடனான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ள போதிலும், “தொலைக்காட்சியின் தற்போதைய பெயரை மாற்றக் கூடாது” என்ற நிபந்தனை அந்தத் தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கட்சியின் பிரத்யேகத் தொலைக்காட்சியாக மாற்ற வேண்டுமானால் பெயர் மாற்றம் அவசியம் என்பதால், இந்த விவகாரத்தில் விஜய் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக மற்றும் அதிமுக போன்ற பல தசாப்த கால அரசியல் அனுபவம் கொண்ட கட்சிகள், தமக்கென தனித்துவமான ஊடகப் பட்டாளத்தையே வைத்துள்ளன. அவற்றுக்குப் போட்டியாக தேர்தல் களத்தில் ஊடக பலம் இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்தே விஜய் இத்தகைய அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, 2026 தேர்தல் களம் என்பது வெறும் மேடை பேச்சுகளாக மட்டுமல்லாமல், டிஜிட்டல் மற்றும் ஊடகப் போராக உருவெடுக்கப் போவதை விஜய்யின் இந்த நகர்வு உறுதிப்படுத்துகிறது. பிப்ரவரி இறுதிக்குள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அல்லது சேனல் கையகப்படுத்துதல் தொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



