ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியானது ‘விஜய ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டில், இந்த முக்கியமான விரத நாள் பிப்ரவரி 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. ஆன்மீக ரீதியாக இந்த நாளுக்கு மிகப்பெரிய மகத்துவம் உண்டு. இந்த நாளில் முழு மனதுடன் மகா விஷ்ணுவை வழிபட்டு, அவருக்குப் பிடித்தமான மஞ்சள் நிறப் பொருட்களை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினால், நம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருகும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.
இந்த ஏகாதசி விரதத்திற்கு ‘விஜய’ ஏகாதசி என்று பெயர் வரக் காரணமே, இது செயல்களில் வெற்றியை தரும் என்பதால் தான். ஒருவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலோ, உத்தியோகத்தில் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது தீராத எதிரிகள் தொல்லை இருந்தாலோ, இந்த நாளில் விரதம் இருப்பது மிகச்சிறந்த தீர்வாக சொல்லப்படுகிறது. இந்த ஏகாதசியின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், நாம் விரதமிருந்து பெறும் புண்ணியப் பயனை, கஷ்டப்படும் வேறொரு நபருக்கும் தானமாக வழங்க முடியும். இது நம்முடைய பாவங்களை நீக்கி, மனத்தெளிவை தரக்கூடியது.
வரலாற்றுப் பின்னணி :
ராமாயண காலத்தில், ராவணனுடன் போர் புரிய செல்வதற்கு முன்பு ஸ்ரீராமபிரான் தனது வானர படையுடன் கடலோரத்தில் தங்கியிருந்தார். அப்போது கடல் கடந்து செல்வதிலும், போரில் வெற்றி பெறுவதிலும் இருந்த சவால்களை சமாளிக்க, மகரிஷிகளின் அறிவுரைப்படி ஸ்ரீராமரே இந்த விஜய ஏகாதசி விரதத்தை மேற்கொண்டார். இதன் பலனாகவே அவர் போரில் மாபெரும் வெற்றி பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே, தீராத நோய்கள், பயம் மற்றும் நீதிமன்ற வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இந்த விரதம் ஒரு வரப்பிரசாதமாகும்.
பூஜை செய்ய வேண்டிய நேரம் :
2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி மதியம் 12:33 மணிக்கு ஏகாதசி திதி தொடங்குகிறது. ஆனால், சூரிய உதயத்தின் போது எந்த நாளில் திதி இருக்கிறதோ, அந்த நாளையே விரத நாளாக கொள்ள வேண்டும். அதன்படி பிப்ரவரி 13-ஆம் தேதி அன்றுதான் பக்தர்கள் விரதம் இருக்க வேண்டும். இன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, மகா விஷ்ணுவின் படத்திற்குச் சந்தனம் மற்றும் மஞ்சள் இட்டு வழிபட வேண்டும்.
இன்று முழுவதும் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை உச்சரித்து, மாலையில் நெய் தீபம் ஏற்றி வழிபாட்டை முடிக்க வேண்டும். அன்று முழு பட்டினியாக இருக்க முடியாதவர்கள், பால் மற்றும் பழங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், இன்றைய தினம் ரூ.10 ரூபாய்க்கு பச்சை கற்பூரம் வாங்கி, அதை உங்கள் வீட்டு பிரோவில் வைத்தால், மகாலட்சுமி அனைத்து விதமான செல்வத்தையும் உங்களுக்கு வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை.
Read More : வாழ்வா – சாவா போராட்டத்தில் ஓபிஎஸ்..!! அரசியல் வாழ்வை தீர்மானிக்க போகும் ஐகோர்ட்..!! பிப்.16இல் தீர்ப்பு..?



