செப்டம்பரில் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களில் இருந்து தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முக்கியத் தீர்மானமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தவெக இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளது. விக்கிரவாண்டி மாநாட்டை போல் பிரம்மாண்டமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ளும் வகையில், மாநாடு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் முதல் வாரம் முதல் மாநிலம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயணம் மண்டல வாரியாக நடைபெறவுள்ளதுடன், எந்த இடங்களில் கூட்டம், யார் யாரை சந்திப்பது, அனுமதிகள் உள்ளிட்ட விபரங்களை நிர்வாகிகள் வகுத்துத் தலைமைக்கு வழங்க வேண்டும் என உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. தவெகவுக்காக தேர்தல் வியூகங்களை மற்றும் பணிகளை ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதையத் தகவலின்படி, விஜய் தனது சுற்றுப்பயணத்தை டெல்டா மாவட்டங்களில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. வடமாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களை விடவும் டெல்டாவில் விஜய்க்கு அதிக ஆதரவு இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிய வந்திருக்கிறது.
காரணம் என்னவென்றால், அதிமுகவுக்கு இவ்வட்டங்களில் கடந்த வருடங்களில் ஏற்பட்ட பின்னடைவு, முக்குலத்தோர் மற்றும் சிறுபான்மை வாக்குகளை பெற்றதில் தோல்வி, அதே சமயம், விஜய்க்கு சிறுபான்மையின மக்களிடம் அதிக ஆதரவு, இதையெல்லாம் கொண்டு விஜய் தனது முதல் அடியை டெல்டாவில் பதிக்க திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.