தமிழக அரசியல் களத்தில் ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமான வியூகங்களை வகுத்து வருகிறார். இருப்பினும், கள நிலவரம் அவர் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, மற்ற கட்சிகளில் உள்ள சீனியர் தலைவர்கள் மற்றும் மக்கள் செல்வாக்குமிக்க முகங்களை தனது பக்கம் ஈர்க்க விஜய் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்பது அக்கட்சியின் தலைமைக்குச் சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் துருவங்களும் தங்களது கூட்டணிகளை இறுதி செய்து, தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் பணிகளில் மின்னல் வேகத்தில் முன்னேறி வருகின்றன. தவெக-வுடன் கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாமக மற்றும் தேமுதிக போன்ற முக்கியக் கட்சிகள், ஏற்கனவே இருக்கும் பெரும் கூட்டணிகளிலேயே தஞ்சம் புகுந்துவிட்டன. இதனால், தற்போதுள்ள அரசியல் சூழலில் தவெக தனித்து விடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. குறைந்தபட்சம் மற்ற கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளையாவது தவெக-வுக்கு இழுக்க வேண்டும் என தனது கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் வழங்கிய அசைன்மென்ட் இதுவரை எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகள் மற்றும் சில இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே கட்சியில் இணைந்து வருவதால், தேர்தல் களத்தில் பலமான ஆளுமை இல்லாதது விஜய்யை தீவிர யோசனையில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்களை தன் பக்கம் இழுக்க தவெக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதிமுகவின் செல்லூர் ராஜு இதில் லாவகமாக செயல்பட்டு அந்த நிர்வாகிகளை தனது பக்கம் ஈர்த்துக் கொண்டது தவெக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், குறிப்பிடத்தக்க அரசியல் ஆளுமைகள் யாரும் இதுவரை இணையாதது அக்கட்சித் தொண்டர்களிடையே ஒருவித கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. இதற்கிடையே, கட்சி நிர்வாகிகளுடன் பேசுவதை சற்று குறைத்துக் கொண்டுள்ள விஜய், தனது தேர்தல் வியூகங்களை முற்றிலும் மாற்றியமைக்க ரகசியத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிகின்றன. 2026 தேர்தல் போர்க்களத்தில் விஜய்யின் இந்த அடுத்தகட்ட நகர்வு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
Read More : டாக்டரிடம் போவதை தவிர்க்க வேண்டுமா..? தூங்கி எழுந்ததும் ஒரு இளநீர் போதும்..!! இத்தனை நன்மைகளா..?



