சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோவில், மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் என மூன்று சிறப்புகளைக் கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 200-வது ஆலயம் ஆகும். மேலும், பாண்டிய நாட்டுத் தலங்களில் இது 10-வது தலமாக விளங்குகிறது.
சங்க காலத்தில், இந்த ஊர் ‘திருகானப்பேர்’ என அழைக்கப்பட்டது. சிவபெருமானின் காளை வாகனம் சுந்தரருக்கு வழி காட்டியதால் இந்த இடத்திற்கு ‘காளையார்கோவில்’ என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பது போல, இந்த தலத்தில் பிறந்தாலும் அல்லது இறந்தாலும் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இக்கோயில் மற்ற ஆலயங்களை விட வித்தியாசமான அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு சோமேஸ்வரர், சொர்ணகாளீஸ்வரர், சுந்தரேஸ்வரர் என மூன்று சிவன் சன்னிதிகளும், சவுந்தரநாயகி, சொர்ணவல்லி, மீனாட்சி என மூன்று அம்பாள் சன்னிதிகளும் தனித்தனியாக அமைந்துள்ளன. வெளி மண்டபத்திலும் மூன்று ஆண் தெய்வங்களும், மூன்று பெண் தெய்வங்களும் எழுந்தருளியுள்ளனர்.
ஆயிரம் சிவாலயங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இங்கு 1000 லிங்கங்களால் உருவான சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள பெரிய கோபுரம், மருது பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோபுரத்தின் உச்சியில் இருந்து பார்த்தால், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் தெரியும் விதத்தில் அது கட்டப்பட்டுள்ளது.
மருது சகோதரர்கள் சரணடையாவிட்டால், சுமார் 150 அடி உயரமுள்ள கோபுரம் தகர்க்கப்படும் என ஆங்கிலேயர் அச்சுறுத்தியதாகவும், அதன் பின்னரே அவர்கள் கைதாகி தூக்கிலிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மன்னர்கள் ஆலயங்களைப் பாதுகாக்கத் தங்கள் உயிரையும் தியாகம் செய்த வரலாற்றை இந்தக் கோயில் உணர்த்துகிறது. சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கி, செல்வ வளம் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
Read More : ஆசிய கோப்பை ஹாக்கி!. 4வது முறையாக இந்தியா சாம்பியன்!. தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாறு!



