தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படும் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை பாரபத்தி பகுதியில் நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் தொடங்கி இரவு 7.30 வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார்.
இது வெறும் கட்சி கூட்டமாக இல்லாமல், ஒரு மாற்றத்தை சுட்டிக்காட்டும் நிகழ்வாகவும், விஜய்யின் அரசியல் அடுத்த கட்ட பயணத்திற்கான துவக்கமாகவும் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. விஜய் என்ன பேசப் போகிறார் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு, அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநாடு நடைபெறும் பகுதியில் சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், விழாவிற்கு ஏற்ப பெரும் அளவில் மேடைகள், ஒலி ஒளி அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக உள்ளன. மேடையின் உச்சியில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்ற வாசகத்துடன் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் தான், தவெக மாநாடு நடைபெறும் பகுதியில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநாட்டு பந்தலுக்கு அருகே உள்ள பார்க்கிங்கில் தவெக தொண்டர்கள் மது அருந்திக் கொண்டிருந்தது தற்போது சர்ச்சையாகியுள்ளது. இவர்கள் மாநாட்டிற்கு வரும்போதே வெளியில் இருந்து மதுபானம் வாங்கி வந்து இங்கு குடிப்பதாக கூறப்படுகிறது.
மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள், ரசிகர்களுக்கு விஜய் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அதில் முக்கியமானது யாரும் மது அருந்தக் கூடாது. ஆனால், அவரின் பேச்சை மதிக்காமல் சில தொண்டர்கள் பொதுவெளியில் அதுவும் மாநாட்டு பந்தலுக்கு அருகிலேயே அமர்ந்து மது குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.