இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2026-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
கள ஆய்வுப் பணி விவரங்கள் :
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO), இந்த கணக்கெடுப்பின்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் சுயவிவரங்கள் பகுதியாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களை இரட்டைப் பிரதிகளில் வழங்குவார்கள்.
வாக்காளர்கள், படிவத்தைப் முழுமையாகப் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு, திரும்பவும் BLO-க்களிடம் வழங்க வேண்டும். முதல் முறை வருகையின் போது வாக்காளர்களிடம் படிவத்தை வழங்க முடியாவிட்டால், அலுவலர்கள் 3 முறை வரை வாக்காளர்களின் இல்லங்களுக்கு வருவார்கள். BLO-க்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தின் ஒரு பிரதியைப் பெற்றுக்கொண்டு, மற்றொரு பிரதியை ஒப்புகை சீட்டாக வாக்காளரிடம் வழங்குவார்கள்.
இந்த கணக்கெடுப்பின் போது, வாக்காளர்கள் தங்களது குடும்பத்தில் காலஞ்சென்ற உறுப்பினர்களின் பெயர்கள், இரட்டைப் பதிவுகள், அல்லது நிரந்தரமாக வெளியூர் சென்றுவிட்ட வாக்காளர்களின் விவரங்கள் ஏதேனும் பட்டியலில் இருந்தால், அவற்றை BLO-க்களிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இந்தப் பணிகளின்போது வாக்காளர்கள் எந்தவிதமான ஆவணங்களையும் இணைத்து வழங்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் சேகரிக்கப்பட்ட இந்த தகவல்களின் அடிப்படையில்தான், டிசம்பர் 9ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்காளர்கள் தங்கள் சுய விவரங்களை https://voters.eci.gov.in என்ற இணையதளம் அல்லது ECINET செயலி மூலமும் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யலாம். எனவே, வாக்காளர் பட்டியலை 100% துல்லியமாகத் தயாரிக்க ஏதுவாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கள விசாரணையின்போது பொதுமக்கள் அனைவரும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



