பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. சட்டபேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் கலைஞர் கருணாநிதி வரலாறு புத்தகத்தை பரிசாக வழங்கினார்..
இந்த ஆண்டும் ஆளுநர் உரையை படிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆர். என்.ரவி. அவர் தனது உரையை படிக்காமல் வெளியேறுவது இது வது 4-வது ஆண்டாகும்.. தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறிய அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார். தேசிய கீதம் பாட வேண்டும் என்று பலமுறை கூறியும் ஏற்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்..
ஆளுநர் வெளிநடப்பை தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஆளுநர் பதவிக்கு அழகல்ல.. மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளார்.. ஆளுநர் மாநில நலனில் அக்கரை கொண்டவராக, மக்கள் நலனில் அக்கரை உள்ளவராக இருக்க வேண்டும்.. பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்துள்ள அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.. ஆனால் ஆளுநர் அதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார்.. பொது மேடைகளில் அரசியல் பேசி அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்.. ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல்..
ஆளுநர் அவர்கள் ஏற்கனவே நடந்து கொண்டது போலவே மீண்டும் இன்று செயல்பட்டிருப்பது வருத்தத்திற்கு உரியது.. ஏற்கனவே உள்ள நடைமுறைகளை பின்பற்றி, தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையை பேரவையில் படிக்காமல் மாண்புமிகு ஆளுநர் சென்றுள்ளதை இந்த பேரவை ஏற்கவில்லை.. மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களின் மேசையில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் இங்கே படிக்கப்பட்டுள்ளதாக இப்பேரவை கருதுகிறது..
அவ்வாறே அவைக்குறிப்பில் இடம்பெறலாம்.. மேலும் மரபுவழி நிகழ்வுகள், மாண்புமிகு பேரவை தலைவரால் படிக்கப்பட உள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் நான் முன்மொழியும் தீர்மானம், அதன் முடிவு மட்டும் பேரவை குறிப்பில் இடம்பெறலாம்..” என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார்..
இதையடுத்து முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.. மேலும் “ இன்று சட்டப்பேரவை உறுப்பினர்களின் கணினியில் பதிவேற்றப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கில மற்றும் தமிழில் அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும்.. வேறெதுவும் அவை குறிப்பில் இடம்பெறாது..” என்று தெரிவித்தார்..



