இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் அமைப்புசாரா தொழிலாளர்களின் முதுமை கால நிதி தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ‘பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்’ (PM-SYM) என்ற ஓய்வூதிய திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் சேரும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் 60 வயதிற்கு பிறகு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ரூ.3,000 உத்தரவாதமான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
குறிப்பாக, வீட்டுப் பணியாளர்கள், தெரு வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ரிக்ஷா இழுப்பவர்கள் போன்ற தினசரி வருமானம் ஈட்டும் பிரிவினருக்கு இது ஒரு பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
இத்திட்டத்தில் சேர விரும்புவோர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.15,000-க்கும் குறைவாக உள்ள தொழிலாளர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள். அதேபோல், ஏற்கனவே EPFO, ESIC அல்லது NPS போன்ற அரசு சார்ந்த இதர நிதிப் பாதுகாப்புத் திட்டங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் இதில் சேர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு தொழிலாளர் தனது கணக்கில் மாதந்தோறும் எவ்வளவு தொகையை செலுத்துகிறாரோ, அதே சமமான தொகையை மத்திய அரசும் அவரது கணக்கில் செலுத்தும். உதாரணமாக, ஒரு தொழிலாளர் தனது வயதின் அடிப்படையில் மாதம் ரூ.100 செலுத்தினால், மத்திய அரசும் தனது பங்கிற்கு ரூ.100 செலுத்தும். இதன் மூலம் மிக குறைந்த முதலீட்டில் ஒரு பெரிய நிதியாதாரத்தை உருவாக்க முடியும்.
இந்த திட்டத்தில் சேரும் வயதைப் பொறுத்து, ஒருவரது மாத சந்தா தொகை ரூ.55 முதல் அதிகபட்சமாக ரூ.200 வரை மட்டுமே இருக்கும். மிக குறைந்த தொகையை சேமிப்பதன் மூலம், முதுமையில் பிறரை சார்ந்து இருக்க வேண்டிய நிலையை தவிர்க்கலாம். இத்திட்டத்தில் சேர விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை மற்றும் வங்கிச் சேமிப்புக் கணக்கு விவரங்களுடன் அருகிலுள்ள பொது சேவை மையங்களை அணுகலாம் அல்லது Maandhan.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.



