விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் பழப் பயிர்களில் கொய்யாவும் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்று செல்லமாக அழைக்கப்படும் கொய்யா மரங்களில், ஆண்டிற்கு மூன்று முறை அறுவடை செய்ய முடியும். சரியான பராமரிப்பு மற்றும் சிறந்த விற்பனை உத்திகள் இருந்தால், விவசாயிகளின் வருமானம் நிச்சயம் உயரும்.
இருப்பினும், காய் பிடிக்கும் பருவத்தில் ஒரு மழை பெய்தால் கூடப் பழங்களில் புழுக்கள் வருவது கொய்யா சாகுபடியில் விவசாயிகள் சந்திக்கும் பெரிய சவாலாக உள்ளது. இந்தக் குறைபாடுகளைச் சரி செய்து, அதிக மகசூல் பெற சில எளிய வழிகளைப் பின்பற்றலாம்.
மகசூல் அதிகரிக்கச் செய்ய வேண்டியவை :
கிளை வெட்டுதல் (கவாத்து): வருடத்தில் ஒருமுறை கொய்யா மரங்களில் உள்ள தேவையில்லாத பழைய கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால், புதிய தளிர்கள் அதிகமாக உருவாகி, அவற்றில் அதிக அளவில் காய்கள் பிடிக்கும்.
சூரிய ஒளி அவசியம்: கொய்யாப் பழங்களில் புழு, பூச்சித் தாக்குதல் ஏற்படாமல் இருக்க, மரத்தின் அனைத்துப் பாகங்களிலும் சூரிய ஒளி நன்கு படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் :
மாவுப் பூச்சி (Mealy Bugs): கோடைக்காலத்தில் மாவுப் பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாகக் கிளைகள் கறுத்து, காய்ந்துவிடும். தாக்குதல் ஏற்பட்டவுடன், தண்ணீரை வேகமாக பீய்ச்சியடித்து பூச்சிகளை நீக்கலாம். அல்லது 1 லிட்டர் தண்ணீரில் 5 மி.லி. மீன் சோப்புக் கரைசலைக் கலந்து தெளித்து இவற்றை கட்டுப்படுத்தலாம்.
தேயிலை கொசு (Tea Mosquito): இந்தக் கொசு தாக்குவதால் பூங்குருத்து மற்றும் நுனிக் குருத்துகள் பாதிக்கப்படும். காய்களில் துளையிட்டுச் சாறை உறிஞ்சுவதால், பழங்களின் மேற்பகுதி கடினமாகி கறுப்புப் புள்ளிகள் தோன்றும். இதைத் தடுக்க, 1 லிட்டர் தண்ணீரில் 30 மி.லி. வேப்ப எண்ணெய் அல்லது கருவாட்டுப் பொறியைக் கலந்து தெளிக்கலாம்.
பழ ஈக்கள்: பழ ஈக்களைக் கட்டுப்படுத்த, 1 லிட்டர் தண்ணீரில் 2 மி.லி. மாலத்தியான் மருந்தைக் கலந்து தெளிக்கலாம்.
அதிக காய்களுக்கு ஊட்டச்சத்து உத்தி :
காய்கள் சிறுத்து, வெடிப்புற்றுக் காணப்பட்டால், 1 லிட்டர் தண்ணீரில் 3 கிராம் பேராக்ஸ் (Borax) கலந்து தெளிக்கலாம். இதை, பூக்கும் தருணம் மற்றும் காய்க்கும் தருணங்களில் செய்வது நல்லது.
அதிக அளவில் பிஞ்சுகள் பிடிக்கவும், நல்ல ருசியான காய்களைப் பெறவும், 1 லிட்டர் தண்ணீரில் 10 கிராம் யூரியா மற்றும் 10 கிராம் துத்தநாக சல்பேட் ஆகியவற்றை கலந்து, இலைகள் வழியாகத் தெளிக்க வேண்டும். இந்தச் சத்துக் கரைசலை ஆண்டிற்கு இரண்டு முறை (அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில்) தெளித்தால் சிறந்த பலன் கிடைக்கும். இந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி வந்தால், ஒவ்வொரு கொய்யா மரத்திலும் விவசாயிகள் உறுதியாக 250 முதல் 300 காய்கள் வரை அதிக மகசூல் பெற முடியும்.



