தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், நாம் வைத்திருக்கும் பழைய தங்க நகைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. தங்கம் ஒரு விலைமதிப்பற்ற உலோகமாக இருந்தாலும், காலப்போக்கில் அதன் மீது தூசு, அழுக்கு மற்றும் தேய்மானம் காரணமாக பளபளப்பை இழப்பது இயல்பு.
நகைகள் மங்கிப் போகும் போது கடைக்குச் செல்லாமல், நமது சமையலறை மற்றும் குளியலறையில் இருக்கும் சில எளிய பொருட்களைப் பயன்படுத்தியே, உங்கள் பழைய நகைகளை புதியவை போல பிரகாசமாக்கலாம்.
வழக்கமான பாலிஷ் : உங்கள் தங்க நகைகளை புதியது போல வைத்திருக்க, காலப்போக்கில் சேரும் தூசு மற்றும் அழுக்குகளை அவ்வப்போது நீக்க வேண்டும். இதற்கு, நகையை மென்மையாக கையாள வேண்டும். மென்மையான துணியை பயன்படுத்தி மிகவும் லேசான அழுத்தத்தில் வட்ட இயக்கங்களில் நகைகளின் மேற்பரப்பை தேய்க்கவும். அதிக அழுத்தம் கொடுப்பதை தவிர்ப்பது, நகைகளில் அரிப்பு அல்லது சேதத்தை தடுக்கும்.
வெதுவெதுப்பான நீர் : தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது விரைவான வழியாகும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் உங்கள் தங்க நகைகளை கவனமாகப் போடவும். சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் மென்மையான பிரஷ் கொண்டு அகற்றவும். வெதுவெதுப்பான நீர், நகைகளில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் மாசுகளை தளர்த்த உதவுவதால், நகைகள் பளபளப்பாக இருக்கும்.
மென்மையான சோப் கரைசல் : தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கு மிகவும் எளிய மற்றும் பாதுகாப்பான வழி, மென்மையான பாத்திர சோப்பை பயன்படுத்துவதுதான். சில துளிகள் சோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்த நீரில் மென்மையான துணி அல்லது பிரஷை நனைத்து நகைகளின் மீது மெதுவாக தேய்க்க வேண்டும். இதை அடிக்கடி செய்து வந்தால், உங்கள் நகைகள் மீண்டும் பிரகாசிக்க தொடங்கும்.
விடாப்பிடியான கீறல்களுக்கு பேக்கிங் சோடா : தங்கம் என்பது உறுதியான உலோகமாக இருந்தாலும், கீறல்களை முழுமையாக எதிர்க்க முடியாது. சிறிய கீறல்களை நீக்கி பளபளப்பை மீட்டெடுக்க, வெதுவெதுப்பான சோப்பு நீரில் சிறிதளவு பேக்கிங் சோடாவை சேர்த்து, அதில் மென்மையான துணியை நனைக்கவும். இந்த கலவையை கீறல் உள்ள பகுதியில் மெதுவாக தடவுவதன் மூலம் நகைகளின் பளபளப்பை மீண்டும் பெற முடியும்.
கடுமையான ரசாயனங்களை தவிர்க்கவும் : ப்ளீச் அல்லது அம்மோனியா போன்ற கடுமையான ரசாயனங்களை தங்க நகைகள் மீது ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அதேபோல், மிகவும் கடினமான துணியால் அழுத்தி தேய்ப்பதும் தங்கத்தின் மேற்பரப்பை சேதப்படுத்தும். கண்ணாடிகளை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் மென்மையான லினன் துணிகளை பயன்படுத்துவது சிறந்தது.
மேலும், நகைகளை சேமிக்கும்போது குளியலறைகள் அல்லது ஈரப்பதம் நிறைந்த இடங்களில் வைப்பதை தவிர்க்கவும். ஏனென்றால், ஈரப்பதம் காலப்போக்கில் நகைகளின் சேதத்திற்கு காரணமாகிவிடும்.