செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பவர், தனது 7 வயது மகன் கவினுடன் வாடகைக் காரில் சென்னை நோக்கிப் பயணித்தபோது நிகழ்ந்த விபத்து, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னே சென்ற கார் திடீரென திரும்பியதால், இவர்களது கார் மோதியதில் முன்புற ஏர்பேக் அதிவேகமாக வெளியே வந்துள்ளது. அப்போது, தந்தையின் மடியில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன் கவின் முகத்தில் ஏர்பேக் பலமாக மோதியது.
இதில் 7 வயது சிறுவனான கவின் மயக்கமடைந்தான். பின்னர், உடனடியாக திருப்போரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரைக் காக்கப் பொருத்தப்பட்ட ஏர்பேக்கே, ஒரு சிறுவனின் மரணத்திற்குக் காரணமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிப்பதால், மத்திய அரசு அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் என விதிகளை கொண்டு வந்துள்ளது. இருப்பினும், விபத்து நேரத்தில் உயிரைக் காக்க வடிவமைக்கப்பட்ட ஏர்பேக் அமைப்புகள் பெரும்பாலும் பெரியவர்களுக்கான வடிவமைப்புடன் இருக்கின்றன.
இவை, சீட் பெல்ட் அணியாத நிலையில் மணிக்கு சுமார் 22.5 கி.மீ வேகத்தில் சுவரில் மோதும் அளவிற்கு அல்லது 321 கி.மீ வேகத்தில் வெளிவந்து விநாடிகளில் பெரிதாகி முகத்தில் மோதும் அளவிற்குப் பலத்துடன் செயல்படுகின்றன. இந்த அதிகபட்ச விசை, குழந்தையின் சிறிய மற்றும் பலவீனமான உடலுக்கு மிகவும் ஆபத்தானது. இது கடுமையான மூளைக் காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
எனவே, இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட, 4 அடி 5 அங்குலத்திற்குக் குறைவான உயரமுள்ள குழந்தைகள் காரின் முன் இருக்கையில் அமர்வது சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை. பெரியவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஏர்பேக்குகள் குழந்தைகளின் தலையில் பலத்த காயத்தையும், மூச்சுத்திணறலையும் ஏற்படுத்தலாம் என்பதால், குழந்தைகளை எப்போதும் பின் இருக்கையில் அமர வைப்பதே மிகவும் பாதுகாப்பானது. மேலும், 14 வயதை எட்டினாலும், தோள்பட்டைக்குப் பெல்ட் சரியாகப் பொருந்தும் அளவிற்கு உயராத வரை குழந்தைகளை முன் இருக்கையில் அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More : மகளிர் உரிமைத்தொகை..!! விண்ணப்பித்த அனைவருக்கும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் ரூ.1,000..!! உதயநிதி அறிவிப்பு